அஹ்மதாபாத் : குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு அம்மாநிலத்தில் உள்ள சுமார் 3000 முஸ்லீம்கள் நரபலி வேட்டையாடப்பட்டனர். இதை முன்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பியினர் என்பதும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தெரிந்தே நடைபெற்றது என்பவை தெஹல்கா உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் வெளிவந்தது.
குஜராத் கலவரத்தில் நரோடா பாட்டியாவில் நடந்த கலவரத்தில் உலகத்தை பார்க்காமலேயே தன் தாயின் கருவறையில் 6 மாதம் இருந்த குழந்தை உள்ளிட்ட 100 நபர்கள் கொல்லப்பட்டார்கள். இக்கலவரம் மற்றும் பெஸ்ட் பேக்கரி வழக்குகள் குஜராத் அரசுக்கு சங்கடங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளதாக நம்பப்படுகிறது.
இச்சூழலில் இன்று காலை நரோடா பாட்டியா வழக்கில் அரசுக்கு எதிரான முக்கிய சாட்சியான நதீம் அஹ்மது சையது 7 மணி அளவில் தன் வீட்டை விட்டு வெளியே வந்த போது அடையாளம் தெரியாத சில நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வெட்டி சாய்த்தனர். அருகிலுள்ள வி.எஸ். மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட போது சையதின் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
கொல்லப்பட்ட சையது குஜராத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இறைச்சி கூடங்களை அரசுக்கு காட்டி கொடுத்தவர் என்று சொல்லப்படும் அதே வேளையில், தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி குஜராத் கலவர வழக்கு சம்பந்தமாக பல தகவல்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.