இன்று அதிகாலை (நடுநிசி)சுமார் 2:00 மணியளவில் எங்கள் உறவினர் வீட்டு பெண்மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இக்கட்டான நிலைமைக்கு போனதால், அந்நேரம் மருத்துவரிடம் அழைத்து செல்வதற்காக நமதூர் பைத்துல்மால், மற்றும் த.மு.மு.க வினரால் நமதூருக்காக அற்பணிக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸிற்கு தொலைபேசியில் அழைத்தோம். ஆனால் ஓட்டுனர்களின் கைபேசி யாவும் அணைக்கப்பட்டிருந்தது. அதனால் வீட்டிலுள்ள சிலர் இருசக்கர வாகனத்தில் ஓட்டுனர்களின் வீடுகளைத்தேடி அலைமோதினர்.
நேரம் தாமதமாகி வருவதாலும், அந்த இக்கட்டான சூழ்நிலையை அறிந்த நமதூர் சேர்மன் அஸ்லம் அவர்கள் உடனே 21ம் வார்டு மெம்பர் இபுறாஹிமை தொடர்பு கொண்டு, அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சாவியை வாங்கி ஓட்டுனர் இல்லாத காரணத்தால் அவர்களே அந்த வாகனத்தை ஓட்டிச்சென்று, ஹாஜா முஹைதீன் டாக்டரிடம் அழைத்துச்சென்று அவர்களின் பரிசோதனைக்குப்பிறகு அந்த உடல்நலம் குன்றிய பெண்மணி தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நமது முக்கிய வேண்டுகோள் இங்கு என்னவெனில், ஆம்புலன்ஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய நமது அதிரை பைத்துல்மாலும், த.மு.மு.கவும் எந்நேரத்திலும் அவசர உதவியை மக்கள் பெற்றுக்கொள்ளும் வகயில் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை காலை, இரவு ஊதியம் என பிரித்து வைத்துக்கொள்ள் வேண்டும், மேலும் ஓட்டுனர்கள் இருக்கும்(உறங்கும் இடம்) இடத்திலேயே அந்த வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட ஏற்பாடு செய்ய வேண்டும், இவ்வாறு செய்வதால் அவசர உதவி நாடி வரும் மக்களுக்கு அந்நேரத்தில் பெரும் இன்னல்களும், ஆம்புலன்ஸை தயார் படுத்துவதில் ஏற்படும் காலதாமதம் தவிற்க்கப் படுவதால் ஏற்படும் உயிர் இழப்புக்களை, இன்னும் சில இன்னல்களையும் இன்ஷா அல்லஹ் தவிர்த்து விடலாம் .
இவ்வாக்கம் யாரையும் தூக்கி பிடிப்பதற்கோ, அல்லது தரம் தாழ்த்துவதற்கோ எழுதப்பட்டதல்ல. ஊர் நடப்புகளை உங்களுக்கு தெரியப்படுத்தி சில அசொளகரியங்களை கலைவதற்காகத்தான் அன்றி வேறொன்றும் இல்லை.
ஆம்புலன்ஸ்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சமூக அக்கறைகொண்டவர்கள் மேற்கண்ட வேண்டுகோளின் பேரில் துரித நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்களா?
ஆக்கம் : லெ.மு.செ. அபுபக்கர்