குர்பானி கொடுக்க எண்ணமுடையவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.(புகாரி (955,5556))
ஆனால் ஒருவருக்கு முதல் 10 நாட்களுக்கு இடையில் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவர் எப்போது குர்பானிக் கொடுப்பதாக எண்ணிக் கொண்டாரா அப்போதிருந்து கொடுக்கும் வரை இவற்றை வெட்டக்கூடாது. ஏனென்றால் குர்பானி கொடுப்பதாக அவர் முடிவெடுக்கும் போது தான் இந்தத் தடை ஏற்படும்.
தன்னுடைய முயற்சியின்றி தானாக நகம் முடி ஆகியவை விழுந்தால் இதில் தவறேதுமில்லை. சில நேரங்களில் இவைகள் இருப்பதினால் மிகவும் துன்பம் ஏற்படலாம். உதாரணமாக கையின் நகம் உடைந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அல்லது அறுவை சிகிச்சை செய்வதற்காகவோ அல்லது காயத்தை குணப்படுத்துவதற்காகவோ முடியை வெட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற சிரமமான நிலையில் வெட்டுவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் அல்லாஹ் எந்த உயிரையும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு கஷ்டம் கொடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை நம்மால் முடிந்த அளவு பின்பற்றுவதே நம்மீது கடமை.
நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய்,வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே கொம்பில் ஒரு குறை, பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு, மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள். நஸயீ (4293)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போது தமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நூல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே மற்றவர்களை வைத்து அறுக்காமல் அறுக்கும் முறையை தெரிந்து கொண்டு, நீங்களே அறுத்து குர்பானி கொடுப்பது சிறந்ததாகும்.
குர்பானி கொடுக்க விம்புவோர் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் உங்களுக்கு தேவையான பங்கு விவரத்தை தெரிந்துக் கொண்டு கொடுப்பது சிறந்ததாகும் என்றுக் கருதுகிறேன்.
நீங்கள் குர்பானி கொடுப்பதற்கு ஒட்டகம்,மாடு,ஆடு இவைகளை ஏதேனும் முன்பே வாங்கிருந்தால் அதிலில் உள்ள தோள்களை நமது பைத்துல்மால்க்கே ஒப்படையுங்கள் மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்