முப்பதே மாதத்தில் கப்பலில் வேலை!
பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு கப்பல் பணிகளில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் சென்னை உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் நாட்டிக்கல் சயின்ஸ் டிப்ளமோ படிப்பில் சேரலாம்.
சென்னை உத்தண்டியில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் கடல் மற்றும் கப்பல் சார்ந்த படிப்புகளுக்கு சிறந்த இடம் 2012ஆம் ஆண்டிற்கான டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பிற்கு விண்ணப்பங்களை இந்த கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த டிப்ளமோ படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள் தொடர்ந்து இளநிலைப் பட்டப் படிப்பும் சேர்ந்து படிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த படிப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? அதற்கான தகுதிநிலைகள் என்ன என்பது குறித்து இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஜயனிடம் கேட்டோம்.
“பிளஸ் டூ வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். டிப்ளமோவுடன் கூடிய பட்டப்படிப்பை மூன்று பிரிவாகப் பிரித்து நடத்துகிறோம். முதல் ஆறு மாதங்கள் கேம்பஸ் படிப்பாக இருக்கும். அடுத்து, பதினெட்டு மாதங்கள் கப்பலில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சியின்போது தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி முடிந்த பின்பு 4 மாதங்கள் மீண்டும் கேம்பஸில் படிக்க வேண்டும். மொத்தம் முப்பதே மாதங்களில் படிப்பு முடிந்து விடும்.
உயர்தரமான பயிற்சியும், படித்து முடித்தவுடன் அதிகளவில் வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. படிக்கும்போது, படிப்பிற்குத் தேவையான உடைகள் மற்றும் இதரப் பயிற்சிகள் அனைத்தையும் கல்வி நிறுவனமே வழங்கும். மேலும் விடுதியில் தங்கியிருந்துதான் படிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பவர்களுக்கு படிப்பிற்கான கட்டணம் இரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய். படித்து முடித்தவுடன், வேலைவாய்ப்பு காத்திருப்பதால், இந்தப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைக்கும். இந்தப் படிப்பை மேற்கொள்ளும் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாட்கோ நிறுவனமும், மீனவ குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீன்வளத்துறையும் உதவித்தொகை வழங்குகின்றன. மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத் தேர்வில் பிளஸ் டூ பாடங்களில் இருந்தும், பொது அறிவுப் பகுதிகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். தற்போது பிளஸ் டூ படித்து வரும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்” என்றார் விஜயன்.
நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பு முடித்தவுடன் ஆயிரக்கணக்கில் சம்பளமும், சில மாதங்கள் கப்பலிலும், சில மாதங்கள் விடுமுறையிலும் உலகை வலம் வரலாம். பணி அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க சம்பளமும், வசதி வாய்ப்புகளை அள்ளித் தரும் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
நுழைவு தேர்வு நடைபெறும் நாள் : டிசம்பர் 18.
விவரங்களுக்கு:
குறிப்பு
இந்தப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைக்குமாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அது வட்டியின் அடிப்படையில் இருக்குமெனில் அவசியம் தவிர்ந்து கொள்வதே மார்க்கச் சட்டமாகும்.