சென்னையில் இ-சலான் அபராதமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை அதிகரித்துள்ளது
‘ஹெல்மெட் மாட்டல... டிரைவிங் லைசென்ஸ் கேட்டா... இல்லை, நோ பார்க்கிங்ல வண்டிய நிறுத்திருக்க... கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ரூபா கட்டணும், எப்படி வசதி? இங்கேயே கவனிக்கறீயா?’ - ‘எந்திரன்’ திரைப்படத்தில் டிராஃபிக் போலீஸ், ரோபோ ரஜினியிடம் லஞ்சம் கேட்பதுப்போல அமைக்கபட்டிருக்கும் காட்சி, சென்னையில் வாகனம் ஓட்டும நிறைய பேரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்.
இதெல்லாம் மூன்று மாதம் முன்பு வரைதான். ஆனால், இன்றோ ரோட்டில் வேகமாக வரும் அத்தனை வண்டிகளையும்,கோழி அமுக்குவதுபோல அமுக்கி, அங்கேயே அபராதம் விதிப்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம். இ-சலான் என்ற அபராத விதிப்பு மூலம் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை.
இந்தியாவில் முதல்முதலில் டெல்லியில் துவக்கப்பட்ட இந்த முறை, பின்னர் ஹைதராபாத், பெங்களூரு என ஓவ்வொரு ஊராகப் பரவி, கடைசியில் ஒரு வழியாக நம்ம சிங்காரச் சென்னைக்கும் வந்தேவிட்டது.
எப்படி செயல்படுகிறது இ-சலான் முறை?
சாலையில் ஹெல்மெட் அணியாமல் புயல் வேகத்தில் புழுதி பறக்க செல்பவரை பாதிவழியில் மடக்கிப் பிடிக்கும் போக்குவரத்துக் காவல்துறையினர், அங்கேயே அபராதம் விதிப்பதுதான் இந்த முறையின் சிறப்பம்சம். இ-சலான் ரசீது கொடுப்பதற்காக அதிகாரிகள் தங்கள் கைகளில், பேருந்துகளில் நடத்துநர் வைத்திருப்பதைப் போன்ற ஒரு சிறு கருவி வைத்திருப்பார்கள்.
ஒவ்வொரு முறை அபராதம் விதிக்கும் போதும் வாகனத்தின் எண்ணை இந்தக் கருவியில் பதிவு செய்யும்பொழுது, கருவியில் இருக்கும் ஜி.பி.ஆர்.எஸ். வசதியைப் பயன்படுத்தி சர்வரில் பதிவாகிவிடும். இதனால், ஒருவர் அதே தவறுக்கு மறுபடியும் சிக்கும்பொழுது, வசூலிக்கப்படும் அபராதத்தொகை அதிகரிக்கும். இந்தக் கருவியில் ஒவ்வொரு வகை குற்றத்திற்கும் தகுந்தாற்போல் அபராதத் தொகைகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். சாலையில் போலீஸ் தடுத்தும் சட்டை செய்யாமல் செல்லும் ஆசாமிகளுக்கு வீடு தேடி சம்மன் வருகிறது.
இந்த அபராத முறைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. காரணம், ஆரம்பத்தில் எது எதற்கு எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும் என்ற தெளிவற்ற நிலை இருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து விதி மீறுவோரிடம் சில காவல்துறையினரே கையிலிருப்பதைப் பிடுங்கி அனுப்பியதால் பலரும் வெளிக்காட்ட முடியாத கடுப்பில் இருந்தனர். ஆனால், இன்றோ இ-சலான் கருவியிலேயே, எந்தெந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம் என ஒரு டேட்டா பேஸ் இருப்பதால், விதி மீறலுக்கு உண்டான பணம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. இதனால், அதிகாரிகள் கைகளில் சென்ற பணம் அரசு கைகளில் தவழத் துவங்கி இருக்கிறது.
இதற்கு உதாரணமாக கடந்த ஜூன் மாதம் வரை மாதம்தோறும் சராசரியாக வசூலான தொகை 70 லட்சம் ரூபாதான். ஆனால், ஜூலையில் இருந்து அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே 5 . 8 கோடி ரூபாகள் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. "சமீபகாலமா லைசென்ஸ் இல்லாம வர்றவங்க எண்ணிக்கை குறைஞ்சிருக்கு" என்கிறார் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர்.
ஏதோ, நாட்ல நல்லது நடந்தா சரிதான்.
எதற்கு எவ்வளவு அபராதம்?
1. பதிவைப் புதிப்பிக்கத் தவறுதல் ரூ.100
2. நிறுத்தக்கோட்டை மீறி நிற்பது ரூ.50
3. வர வேண்டிய தடத்திலிருந்து மாறுவது ரூ.50
4. மஞ்சள் கோட்டை தாண்டுவது ரூ.50
5. தடை செய்யப்பட்ட பகுதியில் செல்வது ரூ.50
6. சிகப்பு/ஆரஞ்சு விளக்கு சமிக்ஞை மீறுவது ரூ.50
7. லாரி அனுமதிக்கப்படாத தடத்தில் செல்லுதல் ரூ.50
8. நோ பார்க்கிங் ரூ.50
9. பைக்கில் மூன்று பேர் அமர்ந்து செல்லுதல் ரூ.50
10. பணியாளர்கள் சீருடை இல்லாமல் வருதல்(உ.தா - ஆட்டோ ஓட்டுநர்) ரூ.50
11. அதிகமான வாடகை கேட்பது ரூ.50
12. டிரைவரின் இருக்கையில் இருவர் அமர்ந்து பயணித்தல் ரூ.50
13. மீட்டர் உடைந்திருத்தல் ரூ.50
14. முன் பக்கத்திலோ/ பின் பக்கத்திலோ சிகப்புக் கொடி/விளக்கு இல்லாமல் அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லுதல் ரூ.50
15. கண் கூசும் முகப்பு விளக்கு ரூ.50
16. குறையுள்ள எண் பலகை வைத்திருப்பது ரூ.50
17. போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.50
18. உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதித்தல் ரூ.50
19. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் ரூ.500
20. தகுதி இழந்தவர் வண்டி ஓட்டுதல் ரூ.500
21. நடத்துநர் உரிமம் வைத்திருக்க அல்லது பெறுவதற்குதகுதி இல்லாமை ரூ.100
22. அதி வேகத்தில் வண்டி ஓட்டுதல் (above 60kms) ரூ.400
23. மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் (40 - 60) ரூ.300
24. செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுதல் ரூ.100
25. குடிபோதையில் வண்டி ஓட்டுதல் (கோர்ட்டில்) ரூ.100
26. மனநிலை அல்லது உடல்நிலை சரி இல்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் ரூ.200
27. போட்டி போட்டுக்கொண்டு வண்டி ஓட்டுதல் (ரேஸ்) ரூ.500
28. அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுதல் ரூ.50
29. அனுமதி இல்லாத மாற்றத்துடன் கூடிய லைசென்ஸ் ரூ.50
30. காற்று ஒலிப்பான், பல்லிசை ஒலிப்பான் ரூ.50
31. பதிவு செய்யபடாத வாகனம் ஓட்டுதல் ரூ.500
32. அனுமதி மீறி வாகனம் ஓட்டுதல் ரூ.500
33. அனுமதிக்கப்பட்ட எடைக்கு கூடுதல் எடையுடன் வண்டி ஓட்டுதல் ரூ.100
34. காப்பீடு அனுமதியின்றி மாறுதல் செய்தல் ரூ.1000
35. வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் ரூ.100
36. போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.50