பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை.
ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் ‘மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்” என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கண் முன்னே காண்பதை நம்புவதற்கு அறிவும் தேவையில்லை, ஆராய்ச்சியும் தேவையில்லை.
‘மரணத்தைத் தடுக்க ஏதேனும் மார்க்கம் உண்டா?” என்று ஆராய்ச்சி செய்தவர்களும் கூட ஒரு நாள் மரணித்துப் போனார்கள். குறைந்த பட்சம் தங்களுக்கு ஏற்பட்ட மரணத்தைத் தள்ளிப் போடக் கூட அவர்களால் இயலாமற்போனது. நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது உறுதி. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் எப்போது இறப்போம்? எப்படி இறப்போம்? எந்த இடத்தில் இறப்போம்? அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
…தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (திருக்குர்ஆன் 31:34)
நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78)
மரணம் எங்கும், எப்பொழுதும், எப்படியும் ஏற்படலாம். வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டால் மறுபடியும் வீடு வந்து சேருவது நிச்சயமல்ல. வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றால் சொந்த ஊருக்குத் திரும்பி வருவது நிச்சயமல்ல. எனவே வீட்டை விட்டு வெளியில் புறப்படும்போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி (பொருள்: இறைவனின் பெயரால்…(புறப்படுகிறேன்) இறைவன் மீதே நம்பிக்கை வைத்தேன்) என்று சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டும். ஒருபோதும் போயிராத ஒரு இடத்துக்கு ஒருவர் எதிர்பாரா விதமாகப் போக நேரலாம். அந்த இடத்தில் அவர் மரணமடையலாம். ‘இறப்பதற்காகவே இவர்; இந்த இடத்துக்கு வந்தாரோ” என்று கூடச் சிலர் சொல்வதுண்டு.
ஒருவர் எந்த இடத்தில் மரணிக்க வேண்டும் என்று அல்லாஹ் தீர்மானித்து விட்டானோ அந்த இடத்துக்கு அவர் போக ஒரு தேவையை ஏற்படுத்துவான்.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ அஸ்ஸா (ரலி) ஆதாரம்: திர்மிதி (2237)
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறைவைக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6:61)
(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள். (திருக்குர்ஆன் 16:32)
ஆகிய வசனங்களிலும் இன்னும் பல்வேறு வசனங்களிலும் உயிரைக் கைப்பற்றுபவர்கள் பலர் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.
உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக (திருக்குர்ஆன் 32:11)
என்னும் வசனம் தெளிவாகவே ஒவ்வொருவருக்கும் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவர் நியமிக்கப் பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. உலகில் பிறந்த கோடானுகோடி மக்களுக்கும் தனித்தனி வானவரா? என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்வி அர்த்தமற்றது. அல்லாஹ்வின் வல்லமையை குறைத்து மதிப்பிடுவதாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக) கோடானு கோடி மக்களுக்கும் கோடானு கோடி வானவரை நியமிப்பது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமல்லவே!
உயிரை எடுக்கும் விதம் நற்செயல்கள் புரிந்து நல்லவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவர் மகிழ்ச்சி அடையும் விதத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார். எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி ‘அஞ்சாதீர்கள்! கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” எனக் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 41:30)
இறைவனை நிராகரித்து தீய செயல்கள் புரிந்து தீயவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவரை பயமுறுத்தும் விதத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார்.
அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்). (திருக் குர்ஆன் 6:93)
இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் மரணிக்கும் போது அந்த இறுதி நேரத்தில் அவர்களுக்கு உண்மை உணர்த்தப்படும்.
நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும்போது ‘அல்லாஹ்வை விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே என்று கேட்பார்கள் ‘அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர் என்று கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவர்கள். (திருக்குர்ஆன் 7:37)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28)
எனவே ஒவோருவரும் தனக்கும் மரணம் எந்த வினாடியிலும் ஏற்படலாம் என்பதை மனதில் நிறுத்தி படைத்த இறைவனை அஞ்சி வாழ்வதும் அவன் வழி காட்டலின் படியும் நடப்போமாக.
A.அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா