"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 ஜனவரி 2012

பிளஸ் டூ மாணவர்கள் ஐஐடியில் எம்ஏ படிக்கலாம்!

0 comments

பிளஸ் டூ படித்த மாணவர்கள் சென்னை ஐஐடியில் ஒருங்கிணைந்த எம்ஏ படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்தப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.


சர்வதேச அளவில் புகழ் பெற்ற பொறியியல் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பொறியியல் படிப்புகளை மட்டுமல்ல, கலைப் படிப்புகளையும் படிக்க தற்போது வாய்ப்புகள் உள்ளன. டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். கலைப்புலம் மற்றும் சமூக அறிவியலில் சிறந்த பயிற்சி பெற்றவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்புகளில், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்களை உருவாக்கும் வகையில் இந்தப் படிப்பு இருக்கும். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் பொதுவான பாடங்கள் நடத்தப்படும். பின்னர், மூன்றாவது ஆண்டிலிருந்து பாடப்பிரிவுகளைப் பொருத்து குறிப்பிட்ட சிறப்புப் பாடங்கள் கற்றுத் தரப்படும். கலை மற்றும் சமூக அறிவியல் துறையுடன் இணைந்து பொறியியல், அறிவியல் மற்றும் மேலாண்மைத் துறை பேராசிரியர்கள் புதிய பாடப் பிரிவுகளில் பாடம் நடத்துவார்கள். இந்தப் படிப்புகளை மாணவர்கள் தங்களது விருப்பப் பாடமாகவும் தேர்வு செய்து கொள்ளலாம். என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பாட மாணவர்களுடன் சேர்ந்து குறிப்பிட்ட சில பாடங்களுக்காக ஒரே வகுப்பில் படிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும். அத்துடன் இந்தியப் பொருளாதாரம், தத்துவம், இலக்கியம், கலாசாரம், சமூகம், பொது நிர்வாகம் ஆகியவை குறித்தும் மாணவர்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும் என்பது இந்தப் படிப்புகளின் சிறப்பு அம்சம். இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம்.


டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் பாடப்பிரிவைப் பொருத்தவரை, பாலினம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி, நகர்ப்புறமயமாதல் ஆகியவற்றில் பாடங்கள் இருக்கும். இந்தப் பாடங்களில் மேலும் ஆர்வம் இருந்தால் இந்த மூன்று துறைகளில் ஏதாவது ஒரு துறையைத் தேர்வு செய்து அத்துறையில் ஆய்வுக் கட்டுரை எழுதலாம் அல்லது அதை விருப்பப்பாடமாக எடுத்துப் படிக்கலாம். இந்தப் படிப்பை எடுத்துப் படித்தவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்களிலோ அல்லது கல்வி நிறுவனங்களிலோ வேலையில் சேரும் வகையில் உரிய திறமைகளுடன் உருவாக்கப்படுகிறார்கள். இங்கிலீஷ் ஸ்டடீஸ் பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியம் மற்றும் ஆங்கில மொழித்திறன் அறிவுடன் பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, தத்துவம் ஆகிய துறைகள் குறித்த அறிமுகமும் இருக்கும். இந்தப் படிப்பை முடித்தவர்கள் ஆங்கில மொழி கற்றுத் தரும் பணியில் ஈடுபடலாம். இதழியல் துறையிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


இந்த ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்பில் மொத்தம் 46 இடங்கள் உள்ளன. முதல் மூன்று செமஸ்டர்களில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள், மாணவர்களின் விருப்பம், அந்தந்தத் துறைகளில் உள்ள இடங்களின் நிலவரம் ஆகியவற்றைப் பொருத்து எந்தப் பாடப்பிரிவு என்பது ஒதுக்கீடு செய்யப்படும்.


பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்ற பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, ஊனமுற்ற மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 15 சதவீத இடங்களும் பழங்குடியின மாணவர்களுக்கு 7.5 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். கிரீமிலேயர் பிரிவு அல்லாத ஓ.பி.சி. மாணவர்களுக்கு 27 சதவீத இடங்களும் ஊனமுற்ற மாணவர்களுக்கு 3 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்தப் படிப்பில் சேர விரும்பும் பொதுப் பிரிவு மாணவர்கள் 1987ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதிக்கு முன்னதாகப் பிறந்திருக்கக் கூடாது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் 1982ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதிக்கு முன்னதாகப் பிறந்திருக்கக்கூடாது.


இந்தப் படிப்பைப் படிக்க செலவு அதிகம் ஆகாது. முதல் ஆண்டில் முதல் செமஸ்டரில் கட்டணமாக ரூ.6,250 செலுத்த வேண்டியதிருக்கும். அத்துடன், திருப்பித் தரத்தக்க காப்பீட்டுத் தொகையாக ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டும். இரண்டாவது செமஸ்டரிலிருந்து படிப்புக் கட்டணம் ரூ.4,500 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு படிப்புக் கட்டணத்தில் ரூ.3 ஆயிரம் சலுகை உண்டு.


இந்தப் படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்காகத் தனி நுழைவுத் தேர்வு (Humanities and Social Sciences Entrance Examination - HSEE) நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, கோவை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மதுரை, மும்பை, புதுடில்லி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். கேள்வித்தாள்கள் ஆங்கிலத்தில் இருக்கும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் தாளில் இங்கிலீஷ், காம்பிரிஹென்சன் ஸ்கில்ஸ், அனலிட்டிக்கல் அண்ட் குவாண்டிடேட்டிவ் எபிலிட்டி, பொது அறிவு ஆகிய பிரிவுகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியப் பொருளாதாரம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்திய சமூகம், தற்கால உலக நிலவரம், சுற்றுச்சூழல், சூழியல் ஆகியவை குறித்து பொது அறிவுக் கேள்விகள் இருக்கும். முதல் பகுதிக் கேள்விகளுக்கு விடையளிக்க இரண்டரை மணி நேரம் வழங்கப்படும். இந்தப் பகுதியில் உள்ள கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். கம்ப்யூட்டர் மூலம் இத்தேர்வை எழுத வேண்டியதிருக்கும். இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க அரை மணி நேரம் வழங்கப்படும். இது கட்டுரைப் பகுதி. இதைத் தனியே வழங்கப்படும் விடைத்தாளில் பதில் அளிக்க வேண்டும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஐஐடி இணையதளத்திலும் விண்ணப்பத் தகவல் அறிக்கையிலும் வெளியிடப் பட்டுள்ளது.இத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களும் ஐஐடி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


சென்னை ஐஐடியில் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், இங்லீஷ் ஸ்டடீஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.1,600 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.800. அனைத்துப் பிரிவு மாணவிகளுக்கும் கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 20-01-2012.

ஆக்கம் : -அஷ்ரப்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி