இந்தியாவில் உள்ள விவசாய குடும்பங்களில், 48.6 சதவீதத்தினர், கடன் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக, விவசாயக் கடன் குறித்த ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அதிக அளவிலான கடனாளிகள் பட்டியலில், ஆந்திரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
பொதுவான கடன்கள் சிறுகடன் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் கூடுதல் வட்டிச் சுமை உள்ளூர் கந்துவட்டிக்காரர்கள், பொருட்கள் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் தரும் முன்கடன் என பல ரகமுண்டு.
இந்த ஆய்வறிக்கையில், நாட்டிலுள்ள விவசாய குடும்பங்களில், 4.34 கோடி குடும்பங்கள் கடன் சுமையால் தத்தளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பார்லிமென்டில் மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் ஹரிஷ் ராவத் தெரிவித்த விவரம்.
பயிர் விளைச்சல் தொடர்ந்து பாதிக்கப்பட்டதால், இந்திய விவசாயிகள், மூலதனச் செலவினங்களுக்காக, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பிரிவுகள் வாயிலாக கடன் பெற்றுள்ளனர்.
மேலும், மருத்துவம், திருமணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காகவும் அவர்கள் கடன் பெறுகின்றனர்.
இதன்படி, இந்தியாவில் அதிக கடன் சுமை கொண்ட விவசாய குடும்பங்களின் பட்டியலில், ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள மொத்த விவசாயக் குடும்பங்களில் அதிகபட்சமாக, 82 சதவீத குடும்பங்கள் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இரண்டாவது இடத்தில் தமிழகம் (74.5 சதவீதம்) உள்ளது. அடுத்த இடங்களில் பஞ்சாய் (65.4 சதவீதம்), கேரளா (64.4), மகாராஷ்டிரா (54.8), அரியானா (53.1), ராஜஸ்தான் (52.4), குஜராத் (51.9) மற்றும் மேற்குவங்கம் (50.1) ஆகியவை உள்ளன.
அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்திலும், பீகார் மற்றும் ராஜஸ்தானிலும் கடன் பெற்ற விவசாயக் குடும்பங்கள் முறையே, 40.3, 33 மற்றும் 20.9 சதவீதம் என்ற அளவில் குறைவாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், கடன் நெருக்கடி தாளாமல் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
thanks : - சமூகநீதி அறகட்டளை