"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
22 பிப்ரவரி 2012

“ஆட்டிசம்” ஓர் விழிப்புணர்வு !

0 comments

முயன்றால் முடியும் ஏன் ? எதற்கு ? எப்படி ? என புரியாத நோய்களில், "ஆட்டிசமும்" ( Autism) ஒன்று. இதை நோய் என சொல்வது தவறு. இது ஒரு குறைபாடே. மூளையில் ஏற்படும் குறைபாடு. ஆனால், இக்குறைபாட்டை பெரிய அளவில் சரி செய்ய முடியாது என்பது வேதனைக்குரிய விஷயம்.


குழந்தை இப்படி பிறந்துவிட்டதே என வேதனைப்பட்டு, பல பெற்றோர் தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வதோடு, குழந்தையின் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகின்றனர். அதற்கு பதிலாக, விடா முயற்சியுடன் போராடினால் வெற்றி பெற முடியும். வேதனைப்படும் அளவுக்கு ஆட்டிசம் குறைபாடு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என இனி பார்ப்போம்.

"ஆட்டிசம்" என்றால் என்ன ?
ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய். மற்ற குழந்தைகளை போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது. இதனால், அவர்களால் மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறிவிடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்துவிடலாம். எதனால், ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகள் தான் இக்குறைபாட்டால் 4 மடங்கு பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணமும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. 10 ஆயிரம் குழந்தைகளில், 5 பேருக்கு இக்குறைபாடு ஏற்படுகிறது.

அறிகுறிகள் ?
1. யார் முகத்தையும் பார்க்காதிருத்தல்.

2. தனியாக இருப்பதை விரும்புதல்.

3. காது கேளாது போல் இருத்தல்.

4. காரணமின்றி மற்றவர்களை தாக்குதல்.

5. அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்.

6. கை, கால்களை வேகமாக அசைத்து வித்தியாசமாக சத்தம் போடுதல்.

7. தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.

8. பேச்சுத்திறன் குறைதல்.

9. விரல் சூப்புதல், நகம் கடித்தல்.

10. பதட்டநிலை.

11. அடம் பிடித்தல்.

மற்ற குழந்தைகளிடம் எப்படி வேறுபடுகின்றனர் ?
மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல் இக் குழந்தைகளின் பார்வை, கூரையையே வெறித்து பார்ப்பது போல், ஒரே இடத்தில் நிலைத்திருக்கும்.நாம் ஒருவரிடம் பேசும் போது கண்ணைப் பார்த்து பேசுவது போல், ஆட்டிசம் குழந்தைகள் கண்ணைப் பார்த்து பேசாது. கைகளை உதறிக் கொண்டே இருக்கும்.மற்ற குழந்தைகளை நாம் கட்டி அணைப்பது போல், இக்குழந்தைகளை கட்டி பிடித்தால் கோபம் வரும். சில குழந்தைகள் மூர்க்கமாக நடந்து கொள்வர். தண்ணீர் வேண்டும் என்றால் வாய் திறந்து கேட்காமல், சைகை மூலம் கேட்பார்கள். சில குழந்தைகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். பாத்ரூம் செல்வதற்கு தண்ணீர் வேண்டும் என்பார்கள், தண்ணீர் வேண்டும் என்றால் பாத்ரூம் போக வேண்டும் என்பார்கள். சில குழந்தைகள் தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பார்கள். வேறு சில குழந்தைகள் திடீரென சிரிக்கும், சில குழந்தைகள் திடீரென அழும். எதற்காக சிரிக்கிறார்கள், எதற்காக அழுகிறார்கள் என தெரியாது. வலி, சிறிய அளவில் இருந்தாலும் “ஓ’ என அலறும். சில குழந்தைகள் கடும் வலி இருந்தாலும் வலியை உணர்வதில்லை.


ஆட்டிசம் குறைபாடு இருந்தால் செய்ய வேண்டியது என்ன ?
நம் வாழ்வின் அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான், ஆட்டிசம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் முதல் சிகிச்சை. ஆம். இவர்களுக்கு பயிற்சி தான் சிகிச்சை.

எதைக் கற்றுக் கொடுப்பது ?
ஏற்கனவே சொன்னது போல், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பிரச்னை இருக்காது. எனவே, நம் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு உள்ளது என, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எது வேண்டும், எது வேண்டாம் என சொல்ல தெரியாது. உதாரணமாக, சிறுநீர் கழிக்க வேண்டும் என, உணர்ந்து சொல்ல தெரியாது. ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு விதமான பிரச்னை இருக்கும் என்பதால், எல்லா குழந்தைகளுக்கும் பொதுவான பயிற்சி முறைகளை வகுக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்து கொண்டு, அதற்குகேற்ப பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும். அவர்களது செயல்களால் கோபப்படாமல், அவர்களை புரிந்து கொண்டு, பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும். இக்குழந்தைகள் வேண்டுமென்றே இதை செய்வதாக கருதி, மிரட்டக் கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எக்காரணத்தை கொண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது. இவர்களுக்கு முதலில் கல்வி என்பது, அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான்.ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, அவர்கள் அதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பர். மற்றக் குழந்தைகளை போல் இவர்களால், பாடங்களை படிக்க முடியாது. எனவே இவர்களை, சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொடுப்பது எளிதாக இருக்கும்.


வழக்கமான கல்வி படித்து, மற்றவர்களை போல் வேலைக்கு செல்ல முடியாது என்பதால், இவர்களுக்கு சிறப்பு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தையல் கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம். இக்குழந்தைகள் சில அற்புதத் திறமைகளை கொண்டிருப்பர். அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். வண்ணம் தீட்டுவது, பேனா, பென்சில் கொடுத்து ஏதாவது கிறுக்க செய்வது என, பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களை அன்றாட வாழ்க்கைக்கு தயார் படுத்த வேண்டும்.

உணவு ?
இக்குழந்தைகளுக்கென தனி உணவு தேவையில்லை என்றாலும், பால், கோதுமை, பிஸ்கட், சாக்லேட், பாஸ்ட்புட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அரிசி பால் எடுத்து சமைத்து கொடுக்கலாம். முடிந்தளவு அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். மருந்து இல்லை: இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை இல்லை. ஆனால், மூர்க்கத்தனமாக செயல்படும் குழந்தைகளை அமைதிப்படுத்த சில மருந்து கொடுக்கப்படுகின்றன.

பெற்றோர் செய்ய வேண்டியது என்ன ?
இக்குழந்தைகளுக்கு பெற்றோரின் பங்கு முக்கியம். அவர்களால் தான், இக்குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வர முடியும். இது ஒரு குறைபாடு என உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை அவமானம் என கருதக் கூடாது. நாம் நம் குழந்தையை ஏற்று, அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்தால் தான், இச்சமூக மக்களும் மரியாதை கொடுக்க முன் வருவர். நமது இன்ப, துன்பத்தை அவர்களால் உணர முடியாது. ஒரு துயரமான சூழலில் சிரித்துக் கொண்டிருப்பர். இதற்காக, அவர்களை வெறுக்கக் கூடாது. மூளை குறைபாட்டால்தான், அவர்கள் அப்படி இருக்கின்றனர் என புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள்; அப்போது தான் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறைந்த எடையுடன் இருந்தால் உஷார் குறைந்த எடையுடன் அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில், 5 சதவீத குழந்தைகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இயல்பான எடையுடன் பிறக்கும் குழந்தைகளில், 1 சதவீத குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என, சமீபத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறைந்த எடையுடனோ அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை பரிசோதிப்பது அவசியம்.

சகோ.நிஜாம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி