மணம் வீசும்
மணநாள் முடிந்தது;
மாதமே உன் விடுப்பு என்பதால்
விடைக்கொடுத்தாய்;
வலிக்கொடுத்தாய்!
களங்கிய மனமும்
கலங்கிய கண்ணும்;
விளங்கிய நீயும்
விலகிச் சென்றுவிட்டாய்!
இளமைக்கு
விலங்கிட்டு சென்றுவிட்டாய்!
குளமென நினைத்து
குளித்துக்கொண்டிருக்கும்
என் விழிகள் - வழிகள்
தெரியாததால் வழிமேல்
விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் வரவுக்காக;
வளைகுடாக் கொடுக்கும்
விடுப்பிற்காக!
நறுமணம் மாறா
தொங்கிக் கொண்டிருக்கும் உன்
மணநாள் சட்டை!
புன்முறுவலுடன் உன் நிழற்படங்கள்
புண்ணாகும் மனதிற்கு
நிழற்குடையாய்!
கைப்பேசியில் கதைகள்
நூறு அளந்தாலும்
தினம் அழுவாத நாளில்லை;
ஆறுதல் சொல்ல அருகில் நீயில்லை!
கத்தி அழமுடியாமல்
வத்திப்போன விழிகளைத்
தலையணையில்
பொத்தி அழுகிறேன்!
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கமும் இமைகளை அணைக்க;
உறங்கப்போவேன் உறங்கிப்போவேன்!
என்னை அறியாமல்
என் அன்னை அறியாமல்!
இப்படிக்கு உன் புதுமனைவி!