இரும்பு சத்து குறைந்து ஏற்படும் ரத்த சோகைதான் இந்த வேடிக்கை ருசிக்கு காரணம். கான்சர் முதல் வாய்க்குள் நுழையாத ’ஏதோ’ஃபீலியா வரை அச்சமும் அக்கரையும்படும் நாம் பல சமயம் அலட்சியமாக இருந்துவிடுவது இரத்த சோகை விஷயத்தில் தான்.
வெளுத்த முகம், வெளிறிய கண்கள், நா, நகம் மற்றும் உள்ளங்கை, அதைப்பான (குளுப்பையான) முகம், படபடப்புடன் இதயம் துடித்தல் (மருத்துவதுறையில் இதனை குதிரை ஓட்டம் போன்ற துடிப்பு என்பர்) என்ற குறிகளுடன், நடந்தால் மூச்சிழைப்பு, ஆயாசம், சோர்வு, ஒரு வேலையிலும் பிடிப்பில்லாமல் வெறுப்பு என இருக்கும் சோகையின் குணங்கள். ஆனால் இவை எல்லாமே இரத்ததில் இரும்புசத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பின்னர் தான் தெரிய வரும்., லேசான சோகையில் எந்த குணங்களும் பெரும்பாலும் இருப்பதில்லை.
ஆணைக்காட்டிலும் பெண்ணுக்கு இரத்தசோகை தொந்தரவு அதிகம் வரும் வாய்ப்பு உண்டு. மாதம் தோறும் மாதவிடாயில் ஏற்படும் இழப்பு, குழந்தை உண்டாயிருக்கும் போது, பாலூட்டும் போது - என பெண்ணிற்கான பிரத்யோக பணியிலேயே அதிக இரும்புசத்து இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். மாதவிடாயில் அதிக இரத்தப் போக்கு அல்லது மாதவிடாயில் இரத்தமே போகாது இருப்பது என இரண்டிற்குமே சோகை ஒரு காரணம். மாதவிடாய் கோளாறுகள் பலவற்றிற்கும் சோகை ஒரு முதல் காரணம்.
இவைதவிர சரியான உணவு அக்கரை இல்லாத ஊட்டசத்து குறைந்த உணவு இரத்த சோகைக்கு மிக முக்கிய காரணம். மூல நோயில் ஏற்படும் இரத்த இழப்பு, சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள், வயிற்றுப் பூச்சிகள், சில புற்று நோய்கள் என பிற நோய்களிலும் இரத்த சோகை ஏற்படக் கூடும்.
முதலில், இரத்த சோகை எனும் அனீமியா உள்ளதா என்பதை தெளிவாக மருத்துவர் உதவியுடன் அறிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய கடமை. சிவப்பணுக்களில் உள்ள இரும்பு சத்து தான் உடல் முற்றும் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் முக்கிய பணியை செய்வது. சரியான இரும்பு இல்லை எனில் சோர்வும் சோம்பலும் என தொந்தரவுகள் ஓவ்வொன்றாய் தொடங்கிவிடும்.
பெரும்பாலான நேரத்தில் அனீமியாவை தேர்ந்தெடுத்த உணவின் மூலமே சரியாக்கிட முடியும். முதல் தேர்வு கீரை. சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என கிடைக்கும் எல்லா கீரைகளிலும் இரும்பு சத்து அதிகம் உண்டு. கீரையைப் பொறுத்தமட்டில் சங்கடப்பட வைக்கும் விஷயம் சந்தைக்கு வரும் கீரைகளில் தெளிக்கப்படும் கொடிய நச்சுத்தன்மையுள்ள பூச்சிக் கொல்லிகள். வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் சிறு சிறு தொட்டிகளில் கிச்சன் கார்டன் என கீரைகளை வீட்டில் வளர்த்து அன்றாடம் பறிப்பது மிக மிக நல்லது. வீட்டு கிச்சன் கழிவுகளும், இயற்கை உரங்களும் வேப்பெண்ணெய் தூவலும் பாதுகாப்பாக உங்கள் கீரைகளைக் கூடுதல் சத்துடன் உருவாக்கிடும்.
எள்ளும் பனைவெல்லமும் அடுப்பங்கரை இரும்புச் சுரங்கங்கள். இரண்டிலும் உள்ள இரும்பு நம் வீடு அரும்புகளுக்கு அவசியமானது. சிறு வயது முதலே எள்ளுருண்டை மீது பிடிப்பை உருவாக்கிடுங்கள். கருப்பாய் உருட்டி கண்ணாடி பாட்டிலில் இருப்பதால், கவர்ச்சி விளம்பரம் சொல்லும் கோகோ மிட்டய்களுக்கு உரிய வரவேற்பை எள்ளுருண்டைக்குக் குழந்தைகள் தருவதில்லை. “எள்ளுருண்டை சாப்பிடு! ஓங்கி அடிச்சா ஒண்ர டன் வெயிட்றா இது! என்று சூர்யா சிங்கம் போல் கர்ஜித்து நம்மூரில் நல்ல விஷயங்களை மார்க்கெட் செய்ய முடிவதில்லை.
காணாக் குறைக்கு, பிரசவ உதவிக்கு டெக்ஸாஸ் போகும் நம்மூர் பாட்டியும், ”அது ஹைஜீனிக்கா? ஹைகலோரியோ?”, என அமெரிக்க அங்கலாய்ப்பை அருப்புக்கோட்டையிலும் துவக்க குளோபலைசேஷனில் அடுப்பங்கரை அந்நியப்பட்டுக் கொண்டே போகிறது.
அடுத்து கம்பஞ்சோறும் வரகரிசி சோறும். பாலிஷ் இனிஷியில் அரிசியின் சாம்ராஜியத்தில் நாம் இழந்த விஷ்யங்களில் ரொம்ப முக்கியமானவை இந்த இரண்டும். கம்பு, வரகு இரண்டும் இரும்பு சத்து ரொம்ப ரொம்ப அதிகமுள்ள பாரம்பரிய தானியங்கள்.இந்த இரு அரிசி ரகங்களின் சுவை சொன்னால் புரியாது சாப்பிட்டால் தான் தெரியும். சுவை மிக்க இந்த பாரம்பரிய தானியத்தில் புலவோ, பிரியாணியோ, கிச்சடியோ கஞ்சியோ எது வேண்டுமானாலும் செய்ய முடியும். உடம்பின் மீது அக்கரையுடன் கொஞ்சம் தேடி வாங்கிச் சாப்பிட்டால் வெளுப்பு வரவே வராது. வாரம் இரண்டு மூன்று நாளாவது இது போன்ற சிறு தானியங்கள் உணவில் சேரட்டும்.
பாசிப்பயறு, தொலிஉளுந்து, சிகப்பு கொண்டை கடலை, முளைகட்டிய தானியங்களில் இருந்து கிடைக்கும் சத்துக்களும் இரும்பைச் சீரணிக்க உதவிடும். பழங்களில் காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, பப்பாளி சோகை உள்ளவர்கள் தினசரி சேர்க்க வேண்டியன. பெரிய நெல்லிக்கனியின் விட்டமின் சி சத்து இரும்பை உடம்பு உள் வாங்க உதவிடும்.
இரும்பு சத்து மிக குறைவாக உள்ள பட்சத்தில் சத்து மாத்திரைகள் மிக அவசியமானது. உங்கள் குடும்ப மருத்துவர் பரிந்துரைக்கும் சரியான சத்து மாத்திரையை எடுப்பது அவசியம். கருவுற்ற மற்றும் பாலூட்டும் காலங்களில் இரும்பு சத்து மாத்திரைகள் அவசியமாகவேத் தேவைப்படுகிறது. சித்த மருந்துகளில் உடலின் பித்ததைச் சீராக்கி இரும்பு சத்தை அளித்திடும் மூலிகை மருந்துகள் நிறையவே உண்டு.
சாதாரணமாக இரும்பு மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்துவதுண்டு. இரத்த சோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பு அவை மலத்தையும் எளிதாகக் கழிக்க வைத்து, குடல் புண்ணையும் ஆற்றக் கூடியது என்பதுதான்.
அனீமியா, மூலம், அதிக மாதவிடாய் இரத்த போக்கு போன்ற பிற நோயில் வந்திருந்தால் அதற்கான சிகிச்சை முக்கியம். வெறும் சத்து மாத்திரை போதாது. ஆறு மாதங்கட்கு ஒரு முறையேனும் ஒவ்வொருவரும் தம் இரத்த இரும்பு அளவு எப்படி உள்ளது என அறிந்து கொள்ளுங்கள். இனி அரிசி திங்கும் ஆவல் அதிகமானால், அட! கல்யாணத்தில் மழை பெய்யும் அவ்வளவு தானே! என இருக்க வேணாம். இரத்தம் ஏற்றும் அளவிற்கு சோகை சோகப்படுத்திவிடக் கூடும்.