மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதமாக வரும் கல்வியாண்டில் 1 முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் பிரிக்கப்பட்டு அச்சடிக்கப்பட உள்ளன. பிற வகுப்பு மாணவர்களுக்கு இப்போதுள்ளது போல் 5 முதல் 6 புத்தகங்கள் வரை வழக்கமான முறையில் அச்சடிக்கப்பட உள்ளன.
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, முழுக் கல்வியாண்டுக்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவைப் பெரிதும் குறைக்கப்படுவதுடன், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்கள் தீர்க்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றவாறு பாட நூல்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்குப் பரிந்துரையை அனுப்பியிருந்தது.
அந்தப் பரிந்துரையை ஏற்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம் :
- ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள பாடநூல் பக்கங்களைக் கணக்கிடும் போது கீழ்க்கண்டவாறு பாட நூல்கள் பிரிக்கப்படுகின்றன.
- 1 முதல் 6 வகுப்புகளுக்கு ஒரு பருவத்துக்கு ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்புத்தகம் வீதம் மூன்று பருவங்களுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
- 1, 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் ஆகிய 4 பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். 3, 4, 5, 6 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், .சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.
- 7, 8 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலத்தைத் தொகுதி – 1 எனவும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியலைத் தொகுதி – 2 எனவும் ஒரு பருவத்துக்கு இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படும்.
- தமிழ்வழி, ஆங்கில வழி ஆகிய இரண்டு வழிகளுக்கும் மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கும் மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.
- சிறுபான்மை மொழிப் பாடங்களில் தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்கள் அந்தந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சேர்த்து அளிக்கப்படும்.
- சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு அந்தந்த மொழி சார்ந்த மொழிப் பாட நூல் தனியாக வழங்கப்படும். அது மூன்றாகப் பிரிக்கப்படாமல் ஆண்டிற்கு ஒரு புத்தகமாகவே, இப்போது நடைமுறையில் உள்ளதைப் போலவே வழங்கப்படும்.
- பாடப் புத்தகங்களை “ஏ 4’ அளவில் அச்சிடுவதன் மூலம் பாடவாரியாக ஒருங்கிணைப்பது எளிதாக அமையும்.
- 9, 10 வகுப்புகளுக்கு முப்பருவ முறை 2012-13ல் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதால் பழைய முறையைப் பின்பற்றி பாட நூல்களை அச்சிட்டு வழங்க வேண்டும்.
- ஆசிரியர் கல்வி வாரியத்தின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றவாறு பாடநூல்களைப் பிரித்து அச்சிட தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு அனுமதியும் வழங்கப்படுகிறது என்று ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 6, 5 கோடி புத்தகங்கள் இந்த ஆண்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இந்தப் புத்தகங்களை அச்சிடுவதற்கு 150 பதிப்பாளர்கள் வரை இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புத்தகங்களை அச்சிடும் பணி ஜனவரி முதல் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.
சமச்சீர் புத்தகங்கள் :
வரும் கல்வியாண்டில் சமச்சீர் புத்தகங்களில் உள்ள குறைகளை நீக்கிப் பிழைகளற்ற புத்தகங்களாக அச்சிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் தொடங்கி மார்ச் மாதத்துக்குள் அச்சிடும் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி ஆண்டின் தொடக்க நாளிலேயே :
அனைத்து மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டின் தொடக்க நாளிலேயே பிழையில்லாத, தரமான புத்தகங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதிப்பு :சமூகநீதி அறக்கட்டளை