'மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...!'
கவியரசு கண்ணதாசனின் அற்புதமான இந்தப் பாடலின் கடைசி இரண்டு சொற்களை மட்டும் 'மதத்தில் இருந்துவிட்டான்' என்று மாற்றினால் போதும்...
தற்போது கர்நாடகத்தில் புகைந்துகொண்டிருக்கும் ஜா'தீ' பிரச்னையோடு இதைத் தொடர்புபடுத்தி நிர்தாட்சண்யமாக சொல்லிவிடலாம்!
''காரணம் என்ன?'' என்று பெங்களூருவில் இருக்கும் நமது நண்பர்களிடம் கேட்டபோதுதான் குக்கீ சுப்ரமண்யா கோயில் குறித்துச் சொன்னார்கள்.
''மங்களூருக்கு அருகில் இருக்கிறது குக்கீ சுப்ரமண்யா கோயில். அங்கு ஒவ்வொரு வருடமும் மூன்று நாள் பெரும் திருவிழா நடக்கும். பிராமணர்களும் மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்களும் இங்கு குவிவார்கள். அதைவிட, இந்த விழாவுக்கு அதிக அளவில் வருவது தலித்துகள்தான். இந்த விழாவில், கல்யாண சாப்பாடுபோல் உயர் ஜாதி பக்தர்களுக்குப் பந்தி போட்டு சாப்பாடு நடக்கும். அவர்கள் மனதாலும் வயிறாலும் செமையாக சாப்பிட்டுவிட்டு எச்சில் வாழை இலைகளை அப்படியே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். பிறகு, தாழ்த்தப்பட்ட மனிதர்கள் தங்கள் பிள்ளைகளோடு கைகளைக் கூப்பியபடி சிரத்தையோடு உயர் ஜாதி மக்களின் எச்சில் இலைகளின் மீது படுத்து உருளுவார்கள். அதாவது, நமது மாநில கோயில்களில் 'அங்கப்பிரதட்சணம்' என நடக்குமே அதுதான் இங்கே கர்நாடகத்தில் சொல்லப்படும் 'உருளி சேவா!'
''போன ஜென்மத்தில் செய்த பாவங்களைத் தீர்த்துக்கொள்ளவே தாழ்த்தப்பட்டவர்கள் இப்படிச் செய்கிறார்கள். தலித் மக்களின் இந்த அங்கப்பிரதட்சணம், அவர்கள் மீது தொற்றியிருக்கும் எல்லா தோல் வியாதிகளையும், குணப்படுத்திவிடுமாம். இதை தீண்டாமை என்று அவர்களே சொல்வதில்லை. 'குக்கீ தெய்வமான சுப்ரமணியத்தின் காலடியில் தங்கள் பிரச்னைகளைப் போட்டுவிட்டால் எ ல்லாம் சரியாகிவிடும்' என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள். உலகின் பிரபல முகங்களான சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யாராய் போன்ற வி.ஐ.பி.க்களும் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். இன்றைய விஞ்ஞான உலகில்கூட எவ்வளவு மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள் பாருங்கள்..'' என்றனர்.
அதைக் கேட்டதுமே பெங்களூருவிலிருந்து 300 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் அந்தக் கோயிலுக்கு பயணித்தோம். மங்களூருவிலிருந்து 104 கிலோமீட்டர் தொலைவில் இருந்த குக்கீ கோயிலுக்குச் சென்றோம். அங்கு கிடைத்த காட்சிகள் நம்மை அதிரவைத்தது.
பாரம்பரியமாக இங்கு நடக்கும் இந்த சம்பிரதாயம் சமீபத்தில்தான் வெளியுலகுக்குத் தெரிந்திருக்கிறது. இதையடுத்து, காட்டுமிராண்டித்தனமான இந்த சடங்கை எதிர்த்து போர்க்குரல் கொடுக்கின்றனர், கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள பகுத்தறிவு அமைப்பினர். உத்தரப்பிரதேச முதல்வரான மாயாவதியும் இந்த சடங்கை கடுமையாகச் சாடியிருக்கிறார். இதனால் வெளியுலகின் வெளிச்சத்தில் இந்தக் கொடுமை பரவிவிட்டதால், கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றமான விதான் சவுதாவும் இந்தப் போராட்டத்தால் ஆடிப்போய் இருக்கிறது. மாநிலத்தின் பொது சேவைத் துறையைச் சேர்ந்த ஏ. நாராயணசாமி, ''இந்தப் பிரச்னை குறித்து ஆராய அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தரும் அறிக்கையின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சொல்லியிருக்கிறார்.
சுப்ரமணியாவில் வசிக்கும் ஹரிஜன சங்கச் செயலாளர் புட்டா, "இ தேவஸ்தானக்கி ஹரிஜனரு, கவுடரு எல்லாவரும் பர்தாதே, மத்த ஏனு? 1925-ல் எங்கள் மக்களை கோயிலுக்குள் அனுமதித்தார்கள். அதற்குப் பிறகு இந்தச் சடங்கு தொடர்ந்து நடக்கிறது. மகாபாரதத்தில்கூட இதுபற்றி கூறப்பட்டுள்ளது. குஷ்டரோகம் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். அதை நாம் மாற்ற முயற்சி செய்யக்கூடாது! எங்கள் மக்கள் இதை வித்தியாசமாகப் பார்க்கவில்லை. யாரோ வேண்டுமென்றே தூண்டி விடுகிறார்கள்'' என்றார்.
கொடுமையான இந்த சடங்கை நேரில் கண்டு கொந்தளித்திருக்கிறார், கர்நாடக பிற்படுத்தப் பட்டோர் அமைப்பின் தலைவர் கே.எஸ்.சிவராம். அவரைச் சந்திக்க முயற்சி த்தோம். அவர் டெல்லிக்குப் போயிருப்பதாகத் தெரிந்ததும் போனில் தொடர்புகொண்டோம்.
''நானு டில்லி பந்ததோதே... நம் ஜனக தேவரு தரிசனமாடக்கே பர்தாரே.. இல்லி நடக்கிதே நோடிதே ஹார்டே வெடிச்சிஹோகங்கே'' என கன்னடத்தில் பேசியவர், ('மக்கள் கடவுளை தரிசிக்கவே இங்கு வருகிறார்கள். ஆனால், இங்கே நடந்த கொடுமைகளைப் பார்த்த பிறகு என் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது..' என்றபடி தமிழிலேயே தொடர்ந்தார்.
''பல ஆண்டுகளாக இந்தக் கொடுமை நடக்கிறது. யாருக்குமே தெரியாமல் இருந்தது. ஊர்க்காரரே என்னிடம் சொன்ன பிறகுதான் நேரில் வந்தேன். காலையில் கோயில் பூஜைகள் முடிந்ததும் உட்பிராகாரத்திற்கு வெளியே நான்கு புறமும் வரிசையாக பந்தி போட்டனர். உயர் ஜாதிக்காரர்கள்தான் உட்கார்ந்து சாப்பிட்டனர். அதன் பிறகு தாழ்த்தப்பட்ட எங்கள் மக்கள் எச்சில் இலை மீது உருண்டார்கள். இதைப் பார்த்ததும் கண்கலங்கிவிட்டேன். உடனே அப்போதே எதிர்த்தேன். ஆனால், கோயில் ஊழியர்கள் என்னைத் தாக்கி வெளியே தள்ளிவிட்டனர். தெருவில் வைத்து உதைத்தார்கள். இதுபற்றி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறேன். வழக்கும் போடப்போகிறேன். 'இழிவான சமுதாய மக்கள்' என இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படிச் சொல்லப் போகிறார்கள்? அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். இருந்தும் வேறு சில அமைச்சர்கள், 'இதெல்லாம் மதம் சார்ந்த நம்பிக்கை' என்று சொல்கிறார்கள். எது மத நம்பிக்கை? இது உண்மையானால், தாழ்த்தப்பட்ட மக்கள் இதுபோல் சாப்பிடட்டும். உயர் ஜாதிக்காரர்கள் இப்படி உருளட்டும்.. நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்... எவ்வளவு கேவலமாகச் சொல்கிறார்கள்? உங்கள் ஊரில் ஒரு பெரியார் இருந்தார்.. கேரளாவில் ஒரு கோவூர் இருந்தார்.. தயவுசெய்து அவர்களை எங்கள் மண்ணில் மீண்டும் பிறக்கச் சொல்லுங்கள்.. அப்படியாவது எம் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கட்டும்..'' என்று விரக்தி மற்றும் கோபத்துடன் சொன்னார்.
உருளி சேவாவின் முகமூடிக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பித்தை எண்ணிக்கொண்டு நாம் கிளம்பியபோது டாக்டர் ஜி.பி. நாயக் என்பவர், ''கர்நாடகாவில்தான் இ துபோன்ற மூடநம்பிக்கைகள் அதிகம். இதற்கு முன்பு இதைவிடக் கொடுமை நடந்தது. சாப்பிட்டுவிட்டு எழும் உயர் ஜாதிக்காரர்கள் தங்கள் நகங்களை வெட்டி அவற்றை எச்சில் இலையில் போட்டுவிட்டுப் போவார்கள். அதை தாழ்த்தப்பட்ட மக்கள் சாப்பிட வேண்டும். அப்படிச் செய்தால், அவர்களது வம்சத்தையே பேய், பிசாசு அண் டாதாம். தடைப்பட்ட பெண்களின் திருமணங்கள் நடக்குமாம். ஆகவே, இளம் பெண்களும் முதியவர்களும் இப்படி நகங்களை உண்பதற்கு போட்டி போடுவார்கள். பின் னர்தான் இது தடை செய்யப்பட்டது. இதில் கொடுமை என்ன என்றால், நாங்கள் இந்த மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடியபோது ஆதிவாசி மக்களே எங்களைத் தாக்க வந்தார்கள். 'எங்களுக்கு நல்லது செய்யும் இவர்கள் எல்லாம் தீய சக்தி' என்று கத்தினார்கள். இப்போதும் அப்படித்தான் சிவராமை அடித்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த 'சுப்ரமணியமே' இந்த மூடநம்பிக்கைக்கு மூடுவிழா நடத்திவிடுவார்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.
கர்நாடக மாநிலத்தில் அதிகமாக படித்தவர்கள் தென் கர்நாடகா மக்கள்தான். குறிப்பாக, மங்களூர் மக்கள். இப்படிப்பட்ட மண்ணில் இப்படியொரு சடங்கு நடப்பது என்றால் அது நிச்சயம் கர்நாடகம் முழுவதும் அவமானம்தான்!
பாம்புக்கு திதி!
தமிழகத்தில் உள்ள பழநிமலை முருகன் கோயிலைப் போல கர்நாடக மாநிலத்தில் பிரபலமாக உள்ள முருகர் கோயில்தான் குக்கீ சுப்ரமண்யா கோயில். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குமாரதாரா நதிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் தாரகாசுரனை அழித்த பிறகு தனது வேலில் உள்ள ரத்தத்தைக் கழுவ இங்குள்ள நதிக்கரைக்கு வந்தார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவத்தை நீக்க இந்த நதியில் நீராடினார் என்கிறது புராணம். ஆதிசங்கரர், மத்வர் இங்கு வழிபட்டார்களாம். சேவல்கொடி வைத்துள்ள இத்தல முருகன் 'குக்குட த்வஜ கந்தஸ்வாமி' என்று அழைக்கப்படுகிறார்.
'மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...!'
நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகப்பெருமான் இங்கு அபயம் கொடுத்துள்ளதால் ராகு, கேது தோஜத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத் தில் நீராடி முருகனை வழிபாடு செய்கிறார்கள். முன்ஷென்ம பாவங்கள், பித்ரு கடனை நிவர்த்தி செய்யும் தலமாகவும் இது கருதப்படுகிறது. வயிற்று வலி, தோல் நோய் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே வழிபட்டால் நோய்கள் குணமாகும் என்ற ஐதீகமும் உண்டு. இதனால் கர்நாடகா மற்றும் வட இந்தியா முழுவதும் பக்தர்கள் அலை மோதுகிறார்கள்.
இந்தக் கோயிலின் இன்னொரு விசேஜம்.. பாம்புக்கு திதி கொடுப்பது. இந்தக் கோயிலில் பல விழாக்கள் நடக்கின்றன. 'சம்பு சஷ்டி' அன்று நடக்கும் விழாவில் ரத ஊர்வலம் நடக்கும். அன்றுதான் 'உருளி சேவா' நடக்கிறது!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (மின்மடலில் வந்த கட்டுரை)
தொடர்புடைய வெளிச்சுட்டி