பிளஸ் டூ தேர்வு ஆரம்பமாகப் போகிறது.
இதுவரை உயிரைக் கொடுத்துப் படித்துக் கொண்டு இருந்த மாணவர்களுக்கும், தேர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு புத்தகத்தைத் தொட்ட மாணவர்களுக்கும் பொதுவாக இருக்கும் பயம்,ஒன்றே ஒன்றுதான். அதுதான் தேர்வு பயம்.
முதலில் எல்லாம் மாணவர்களுக்குத் தேர்வு பயம் என்றால் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்பதாகத்தான் இருந்தது. ஆனால்
இப்போது அந்தப் பயம் இல்லை. எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போய்விடுமோ? என்ற பயம்தான் அதிகம் இருக்கிறது. மாணவர்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தோடு
2004 ஆம் ஆண்டு "வெளிச்சம்' அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருபவர் ஷெரின். நன்றாகப் படித்து பிளஸ் டூ - வில் நிறைய மதிப்பெண்கள் எடுத்தும் வசதியில்லாத காரணத்தால் கல்லூரிக்குச் செல்ல முடியாத 500 மாணவர்களைப் படிக்க வைத்திருக்கிறது இந்த "வெளிச்சம்'அமைப்பு. மாணவர்களின் தேர்வு பயம், தற்கொலை எண்ணம் உட்பட பல உளவியல் பிரச்னைகளைத் தீர்க்க ஆலோசனைகளும், நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார் ஷெரின்.
தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், மாணவர்கள் இந்தத் தேர்வை எப்படி நம்பிக்கையுடன் எதிர்கொள்வது என்று பார்ப்போம்...
* தேர்வுக்கு ஒருவாரத்துக்கு முன்பே, மாணவர்கள் மனதை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும். ஐயோ... அதைப் படிக்கவில்லையே... இதைப் படிக்கவில்லையே... படிக்காத பாடங்களிலிருந்து கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது? என்ற படபடப்புடன் இருக்கக் கூடாது. ஆண்டு முழுவதும் படித்த பாடங்களை மிகச் சிறப்பாக எழுதினால் போதும் என்று நினைக்க வேண்டும்.
எனவே மாணவர்கள் புதிதாக படிக்க முயல்வதைத் தவிர்த்து, ஏற்கெனவே படித்ததைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். எழுதிப் பார்க்க வேண்டும். புதிதாகப் படித்தால் அவற்றைத் தேர்வு நேரத்தில் நினைவுக்குக் கொண்டு வருவது சிரமம். பழைய பாடங்களையும் முறையாகத் திரும்பவும் படிக்காவிட்டால் அந்தப் பாடங்களிலும் சிறப்பாகத் தேர்வு எழுத முடியாது.
* இதற்கு முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட கேள்விகளை குறித்து வைத்துக் கொண்டு, அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி மிகவும் நன்றாகப் படித்து வைத்துக் கொண்டால், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது எளிது.
* நாளைக்குத் தேர்வு என்றால் இன்று எல்லாப் பாடங்களையும் திரும்பவும் படிக்க நேரம் இருக்காது. முதலிலேயே குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் குறிப்புகளை மட்டும் படித்தால் போதும். முழுப் பாடமும் நினைவுக்கு வந்துவிடும். இல்லையென்றால் படித்த பாடங்களை மறுபடியும் நன்றாகப் படிக்க முடியவில்லையே என்ற எண்ணம் ஏற்படும். படித்த பாடங்கள் மறந்துவிடுமோ என்ற பயமும் ஏற்படும்.
* தேர்வுக்கு முன்பு பாடங்களைப் பற்றி பிற மாணவர்களுடன் எதுவும் பேசக் கூடாது. அந்தக் கேள்வி வரும், இந்தக் கேள்வி வரும் என்று ஆளாளுக்குச் சொல்வார்கள். அவற்றை படிக்காத மாணவர்கள், உடனே டென்ஷன் ஆகிவிடுவார்கள். அந்த டென்ஷனில் ஏற்கெனவே படித்ததும் மறந்து போய்விடும்.
* தேர்வு எழுதி முடித்து வந்த பின்பு, தேர்வில் எழுதிய பதில்களைப் பற்றிப் பிறரிடம் பேசக் கூடாது. அப்படிப் பேசினால் அந்தக் கேள்விக்கு எழுதிய பதில் தவறானது என்று பிறர் சொல்வார்கள். அதைக் கேட்டவுடன் டென்ஷனாகிவிடும்.
இப்படி தேர்வுக்கு முன்பும், பின்பும் அதைப் பற்றிப் பிறரிடம் பேசுவதால்,எழுதிய தேர்வில் தவறாகப் பதில் எழுதிவிட்டோம். எனவே குறைவான மதிப்பெண்கள்தாம் கிடைக்கும் என்று மாணவர்கள் முடிவெடுத்துவிடுவார்கள். அதற்குப் பின்பு எழுதப் போகும் தேர்வுகளை ஆர்வமாய் எழுதமாட்டார்கள். அவற்றிலும் மதிப்பெண்கள் குறைந்துவிடும். எனவே எழுதிய தேர்வுகளைப் பற்றி பேசி, தேவையில்லாத பயத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
* தேர்வு எழுதுவதற்கு ஹாலுக்குச் செல்வதற்கு முன்பு மனதை முழுமையாக அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை கடினமாக முயற்சி செய்தாகிவிட்டது. இனி வெற்றி, தோல்வி பற்றி யோசிக்கக் கூடாது என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* தேர்வு ஹாலுக்குச் சென்ற பின்பு, கேள்வித்தாள் கொடுப்பதற்கு முன்பு மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். படபடப்பைத் தவிர்க்க வேண்டும். கேள்வித்தாளை வாங்கும்போது படபடப்பாக இருந்தால், கேள்விகளைத் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும்.
* விடையெழுதும் தாளில் முதல் பக்கத்தைப் பூர்த்தி செய்யும்போது,நிதானமாக சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். படபடப்பாக இருந்தால் தவறாகப் பூர்த்தி செய்துவிடுவார்கள். இதனால் வேறு சிக்கலாகிவிடும்.
* எல்லாவற்றையும்விட முக்கியமானது, தேர்வு நடக்கும் இடத்துக்கு தேர்வு ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே செல்வதற்குத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். போக்குவரத்து நெரிசல், வாகனப் பழுது போன்ற எதிர்பாராத காரணங்களால் தேர்வு நடக்கும் இடத்துக்குத் தாமதமாகச் சென்றால், அந்தத் தேர்வில் படித்த அளவுக்கு முழு மதிப்பெண் எடுக்க முடியாது. அதுமட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரும் தேர்வுகளை எழுத ஊக்கம் குன்றிவிடும்.
இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் மாணவர்கள் தேர்வு பயம் இன்றி சிறப்பாகத் தேர்வு எழுத முடியும்.
மாணவர்களிடம் தேர்வு பயம் ஏற்படாமல் இருக்க ஆசிரியரும்,பெற்றோரும் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
* முதலில் மாணவர்களிடம் நம்பிக்கைக் குறைவு ஏற்படும்படி பேசக் கூடாது. "நீயெல்லாம் படித்துக் கிழித்தாய்?'
என்பது போன்ற சொற்கள் மாணவர்களைக் காயப்படுத்திவிடும்.
* "நீ இந்த ஆண்டுத் தேர்வில் இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலமே இல்லை' என்பது போல பெற்றோர் மாணவர்களிடம் பேசக் கூடாது.
* வகுப்புகளில் நடக்கும் தேர்வுகளில் பெற்றோர், ஆசிரியர்கள் எடுக்கச் சொன்ன மதிப்பெண்களை மாணவர்களால் எடுக்க முடியவில்லை என்றால், மனதில் தன்னம்பிக்கை போய்விடும். இறுதித் தேர்வில் அந்த அளவுக்கு நம்மால் மதிப்பெண் எடுக்க முடியாது என்ற எண்ணம் இறுகிவிடும். படிப்பில் ஆர்வம் வற்றிவிடும். தேர்வில் பெற்றோர் எடுக்கச் சொன்ன மதிப்பெண்களை எடுக்காமல் போய்விட்டால் என்ன செய்வது?என்ற பயம் தொற்றிக் கொள்ளும். எனவே இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று மாணவர்களிடம் பெற்றோர் - ஆசிரியர்கள் திணிக்கக் கூடாது.
* சில மாணவர்கள் பள்ளியிறுதித் தேர்வை நினைத்தாலே வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு உள்ளாவதும் உண்டு. இதனால் நன்றாகத் தேர்வு எழுத முடியாது. ஆண்டு முழுவதும் படித்தது வீணாகிவிடும். வீணான பயத்தைத் தவிர்க்க வேண்டும்.
* எந்தப் பாடமாக இருந்தாலும் மாணவர்கள் விருப்பத்துடன் படிக்கும்வகையில் ஆசிரியர்கள் மாணவர்களை நேசித்துப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் தேர்வு பயம் என்பதையே இல்லாமற் செய்துவிடலாம் '' என்றார் ஷெரின்.