அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) இந்த தொடரில் நமது சமுதாயம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு இருக்கும் சில தீமையான காரியங்களைப் பற்றி பார்ப்போம்.
நம்முடைய சமுதாயத்தில் பிற மதக் கலாச்சாரத்தில் இருந்து நம் மக்களிடையே பரவி காலம் காலமாக நல்லது என்று பின்பற்றப்படும் காரியங்களில் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்பெய்த விழா, வரதட்சணை விழா, தர்கா கந்தூரி விழா, மௌலூது விழா போன்ற மார்க்கம் காட்டித்தராத விழாக்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்தக்காரியங்கள் நமக்கு நன்மையை பெற்றுத்தருமா?
சகோதர, சகோதரிகளே! நோன்பை பற்றி சொல்லாமல் நமக்கு தெரிந்த சாதாரண காரியங்களைப்பற்றியா? கூறப்போகிறீர்கள் என்று தாங்கள் நினைக்கலாம். மக்களால் உணரப்படாத தீமையான காரியங்கள் அனைத்தும் நம்மை விட்டு அகலும் வரை சொல்லிக்கொண்டே இருந்தால்தான் நானும், நீங்களும் இதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற அச்சம் ஏற்படும்.
நாம் வைத்திருக்கும் நோன்பு நம்முடைய தீமைகளை அகற்றி தூய்மையான இறையச்சத்துடன் கூடிய மக்களாக நம்மை மாற்ற வேண்டும்.
பிற மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு இறக்குமதியான பழக்கங்கள்:
பிறமதத்தில் இருப்பது
இஸ்லாமியர்கள் பின்பற்றுவது
தேர் திருவிழா
சந்தனக் கூடு திருவிழா
காது குத்து விழா
காதணி விழா
வளைகாப்பு
ஒப்பிச்சு பார்ப்பது
கொடிமர விழா
கொடிமர கந்தூரி விழா
பிறந்த நாள் விழா
பிறந்த நாள் விழா
மஞ்சள் நீராட்டு விழா
பூப்பெய்த நீராட்டு விழா
கல், மரம், புனிதம்
தர்கா,மரம்,நார்சா புனிதம்
தவசம்,திதி
மூன்று,ஏழு,நாற்பது பாத்திஹா
வரதட்சணை
கைக்கூலி
தலை தீபாவளி
தலை பெருநாள்
பிறமதத்தில் இருந்து இறக்குமதியானதை மார்க்கம் அறியாமல் பின்பற்றி வந்த சிலர் தூய்மையான மார்க்கம் அறிந்த பிறகு இதிலிருந்து விலகி விட்டார்கள். என்னதான் விலகினாலும் குடும்பத்திற்குள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் மற்றவர்களும் விலக வேண்டும் என்று.
பிறந்த நாள் விழா:
பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள் என்று பிற விழாக்களை புறக்கணிப்பவர்கள் கூட இந்த விழாவை அதிக இடங்களில் கொண்டாடி வருவதை பார்த்து வருகிறேன். மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்கிறீர்கள் என்று கூறினால் - நாங்கள் இணைவைக்கும் காரியம் செய்யவில்லையே என்று பதில் சொல்கிறார்கள். வளைகுடாவில் குடும்பத்தோடு உள்ள சகோதரர்கள் அதிகமான பேர் கொண்டாடி வருகிறார்கள். பிற மத நண்பர்கள் வீட்டு பிறந்த நாள் விழாவுக்கும் சென்று வருகிறார்கள். நாமும் இதிலிருந்து விலகி பிறர் கொண்டாடும் இடங்களுக்கும் செல்லாமல் இருப்பது நமக்கு நன்மையை பெற்றுத் தரும்.
காதணி விழா:
பெண் குழந்தை பிறந்து 2 வயது அல்லது 3 வயது வந்து விட்டதா? காதணி விழா அவசியம் செய்ய வேண்டும். அடி பத்திரிக்கையை, கொடு ஊரைக் கூட்டி பிரியாணி விருந்தை. பகுத்தறிவு மார்க்கத்தில் இருந்து கொண்டு சகோதர சகோதரிகள் எங்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பூப்பெய்த நீராட்டு விழா:
ஒரு பெண் 10 வயதிலிருந்து 15 வயது வரைக்குள் (அதற்கும் மேலும் ஆகலாம்) இயற்கையாக வயதிற்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும். பல ஊர்களில் இந்த விழா பத்திரிக்கை அடித்து அழைக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. நமது ஊரில் கூப்பாடு மட்டும்தான் என்று நினைக்கிறேன். என் மகள் வயதிற்கு வந்து விட்டால் என்பதை ஊருக்கு அறிவித்து விருந்து போடும் நிகழ்ச்சியா இது.
நேற்று வரை பாவாடை சட்டை, சுடிதார் அணிந்த பிள்ளைக்கு விலை உயர்ந்த பட்டு சேலை எடுத்து அந்த பிள்ளைக்கு கட்டி விடுவார்கள் (பொம்மைக்கு சுற்றுவது போல்). இந்தப்பிள்ளையை அனைவரும் வந்து பார்த்து விட்டு அன்பளிப்புகளை செய்து விட்டு விருந்திலும் கலந்து கொள்வார்கள்.
வெளியூரைச் சேர்ந்த என் உறவினர் வீட்டில் வயதிற்கு வந்த விழா பத்திரிக்கை அடித்து நடத்தப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் போன் செய்து இந்த விழா மார்க்கம் காட்டித்தராதது, இதை செய்யாதீர்கள் என்று சொன்னேன். பிள்ளையின் தந்தை, தாத்தா விருந்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மேலும் தெருவில் உள்ளவர்கள் விருந்து வைக்கவில்லை என்றால் கேவலமாக பார்ப்பார்கள் என்ற பதில்தான் வந்ததது. மார்க்கத்தை விட இவர்களின் போலி கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமாம்.
வசதி உள்ளவர்கள் இந்த விழாவை நடத்தி விடுகிறார்கள். ஏழை வீட்டுப் பிள்ளைகள் நமக்கும் நம் வீட்டில் இந்த விழா நடத்தப்பட வேண்டும் என்று தங்கள் தாயாரிடம் சொல்லி வைத்து விடுகிறார்கள்.
ஒரு பெண் வயதிற்கு வந்து விட்டால் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. பெரிய அளவு செலவு எதுவும் செய்ய வேண்டியதில்லை. வயதிற்கு வந்த பெண்ணை பார்க்க போகிறேன் என்று அன்பளிப்பு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
வயதிற்கு வந்த பெண்ணிற்கு ஆரோக்கிய உணவுகள் அளித்து 7 நாள் அல்லது 10 நாள் வீட்டில் வைத்து நல்லபடியாக கவனித்து பிறகு சாதாரணமாக எப்பொழுதும் போவது போல் பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கலாம். சாதாரணமாக சென்ற பெண் புர்க்கா அணிந்து வெளியில் சென்றாலே இந்த பெண் வயதிற்கு வந்து விட்டது என்று புரிந்து கொள்வார்கள். ஊரைக் கூட்டி செய்யப்படும் காரியம் இது இல்லை.
தர்கா கந்தூரி விழா:
இதைப்பற்றி தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். தெருவுக்கு ஒரு புனித தர்கா. கந்தூரிக்கு செல்வதற்கு பிள்ளைகளுக்கு புது துணி உடுத்தி அழைத்துச் சென்றதை போன வருடத்தில் கூட பார்த்தேன். ஆனால் இஸ்லாம் காட்டித்தராத இந்த விழா வருடா வருடம் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் குறைந்து கொண்டு வந்தது இப்பொழுது சில மெருகேற்றத்துடன் ஷைத்தானின் துணையுடன் நலமாக நடந்து கொண்டு இருக்கிறது. பிள்ளைகளை கவர்வதற்காக ராட்சத ராட்டினங்களும் உண்டு. பிள்ளைகள் வந்தால்தானே தாய்மார்களும் வரமுடியும். கந்தூரியை நடத்துபவர்கள் பார்த்தீர்களா கந்தூரிக்கு உள்ள கூட்டத்தை என்று பெருமைப்பட??? முடியும்.
ஒரு தடவை (1999ஆம் வருடம்) ஆட்டோவில் அறிவிப்பு கந்தூரி நிகழ்ச்சியில் ஒரு நடிகையின் பெயர் கூறி நாட்டியம் நடக்க உள்ளது, அனைவரும் வந்து கலந்து கொண்டு அவுலியாவிடம் ஆசி பெற்று செல்லுங்கள் என்பதாக, நடிகையின் நாட்டியத்தை பார்த்து விட்டு அவுலியாவிடம் ஆசி??? வாங்க வேண்டுமாம். இந்த அறிவிப்பை கேட்டு இதற்கு செல்லும் இஸ்லாமியர்களை என்ணி வருத்தப்படத்தான் முடிந்தது. (ஏகத்துவ மணம் வீச ஆரம்பித்தவுடன் தர்காவுக்கு செல்லும் கூட்டம் அதிகளவில் குறைந்திருப்பது உண்மையே).
வரதட்சணை விழா (பெண் வீட்டில் பகல் கொள்ளை):
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை (மஹர்) கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் : 4:4)
வல்ல அல்லாஹ் கூறியதை நம் மக்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
ஆனால் பெண் வீட்டில் எல்லோரும் விழித்திருக்கும் சமயத்தில் மாப்பிள்ளையின் தந்தை, தாய், சகோதரிகள் அனைவரும் ஒன்று கூடி வந்து பெண்ணின் பெற்றோர் சம்மதத்துடன் (மனவேதனைப்படுத்தி வலுக்கட்டாயமாக) பெண்ணிற்கு வேண்டிய வீடு, நகைகளை கொள்ளையடித்து சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த கொடுமையைப் பற்றி அதிகம் விளக்க வேண்டியதில்லை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
மௌலூது விழா:
மௌலூது மாதம் என்று கணக்கு வைத்து மௌலூது ஓதப்படுகிறது. வீடு குடி போனாலும் ஓதப்படுகிறது. பரக்கத் வேண்டியும் ஓதப்படுகிறது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஓதுகிறார்கள். யார் காட்டித் தந்தது. இதுவும் மார்க்கத்தில் இல்லாத காரியம்.
மார்க்கத்தில் இல்லாத பழக்கங்கள் இன்னும் நம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதற்கு ஓர் உதாரணம்: வளைகுடாவில் பல வருடங்கள் வேலை செய்து வந்த நண்பர் ஒருவர் வேலை பிடிக்காத காரணத்தாலும் உடல் நலம் கருதியும் ஊரோடு போய் தங்கி ஒரு சிறு கடை நடத்தி சிரமத்தோடு வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
மார்க்கம் அறியாத காலத்தில் கந்தூரி, மௌலூது போன்ற காரியங்களில் ஈடுபட்டவர். இவரின் உறவினர்கள் யாரும் மாறவில்லை. இவர் மட்டும் மாறியதால் உறவினர் அனைவரும் நீ நஜாத்(தவ்ஹீது)காரனாகி விட்ட காரணத்தால் உனக்கு முஸீபத்து பிடித்து விட்டது. எங்களைப்போல் மௌலூது ஒது, தர்காகளுக்குச் செல் என்று அறிவுரை கூறுகிறார்களாம். எனக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று உறுதியோடு இருக்கிறார்.
இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? மார்க்கம் காட்டித்தந்துள்ளதா? என்று கேட்டால் எங்கள் முன்னோர்கள் செய்தார்கள் அதனால் செய்கிறோம் என்ற பதில் வரும். தூதர்தான் வழிகாட்டியே தவிர, முன்னோர்கள் வழிகாட்டியாகி விடமாட்டார்கள்.
எவர் ஒருவர் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி))
இந்த நபிமொழியை மனதில் வைத்து மார்க்கம் காட்டித்தராத காரியங்களை செய்து வரும் சகோதர, சகோதரிகள் தவ்பா செய்துவிட்டு இதிலிருந்து விலகி தூய்மையான மார்க்கத்தை அறிந்து அதன்படி வாழ முயற்சி செய்ய வேண்டும்.
மேலும் ஏகத்துவத்தை பிறருக்கு சொல்லும் சகோதரர்கள் கூட சில நேரங்களில் மேற்கண்ட காரியங்களில், (தர்காவுக்கு செல்லமாட்டார்கள், மௌலூது ஓத மாட்டார்கள்) தன் மனைவி, உறவினர்களுக்கு அடிபணிந்து சிலவற்றை செய்து விடுகிறார்கள். அவர்களுக்கு வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கை:
வேதத்தை படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 2:44)
நன்றி :S.அலாவுதீன்
இன்ஷாஅல்லாஹ் வளரும்....
பதிப்பு : அதிரை நிருபர்
10 ஆகஸ்ட் 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி