யா ரஹ்மானே எங்களின் பாவம்
நீங்கிடச் செய்வாயே!
இந்த சங்கை மிகுந்த ரமளானின் பொருட்டால்
ரஹ்மத்தைச் சொறிவாயே!
பசியினை மறந்தோம் தாகமும் பொறுத்தோம்
உடல் நலம் காப்பாயே!
உனை துதிக்கவே பிறந்தோம் தூக்கமும் துறந்தோம்
மன நலம் காப்பாயே!
திருமறை வசனம் தினம் தினம் பயின்றோம்
அறிவினைத் தருவாயே!
எங்கள் திருநபி வாழ்ந்த வழிதன்னில் வாழ்வோம்
நேர் வழி தருவாயே!
நேரத்தில் தொழுதோம் நிறைவாகத் தொழுதோம்
ஏற்று நீ அருள்வாயே!
இந்த ரமளானின் சிறப்பாம் உபரியும் தொழுதோம்
உவப்புடன் ஏற்பாயே!
சஹரினில் விழித்தோம் வயிறார புசித்தோம்
பரக்கத்தைத் தருவாயே!
இன்று மஃரிபு வரைக்கும் மன நிறைவோடு
பொறுமையும் தருவாயே!
தீயதைத் துறப்போம் தேவையைக் குறைப்போம்
தைரியம் தருவாயே!
எங்கள் இதயத்தில் ஈமான் உறுதியாய் விளங்க
ஆசியும் புரிவாயே!
இரவினில் விழித்தோம் இறை உனை துதித்தோம்
ஈடேற்றம் அருள்வாயே!
இரு கரம் விரித்து ஏந்தியே கேட்டோம்
நிஃமத்தைச் சொறிவாயே!
சக்காத்து கணக்கோடு சதக்காவும் கொடுத்தோம்
தவுளத்தைச் சொறிவாயே!
புனித ரமளானின் பெயரால் பொருளையும் பகிர்ந்தோம்
பொருந்தியும் கொள்வாயே!
ஒற்றுமைக் கயிற்றை உறுதியாய்ப் பிடிக்க
உளமாற்றம் அருள்வாயே!
ஓரிறை ஈமான் உலகெங்கும் நிலவ
இஃக்லாசைத் தருவாயே!
இனி வரும் வருடம் பொறுமையாய் இருப்போம்
போய் வா ரமளானே!
எங்கள் பாவங்கள் கழித்து வாழ்க்கையை அளித்த
வளமான ரமளானே!
(குறிப்பு: முதல் நான்கு வரிகள் நம்தூரின் பழமை வாய்ந்த ‘நோன்பை வழியனுப்பும்” பாடலிலிருந்து நன்றியுடன் எடுத்தாண்டுள்ளேன்)
- சபீர்
Sabeer abuShahruk
Please press PLAY button to hear again from the below audio player
அக்கம்:அதிரை-நிருபர்
பதிப்பு :அதிரை fact