பள்ளிகளில் பாடங்களாக அறிவியலைப் படித்திருக்கும் நம்மில் பலருக்கு, வாழ்வின் பல்வேறு பகுதிகளிலும் அதைப் பயன்படுத்தப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
வழக்கமான படிப்புகளில் இருந்து பயன்பாட்டு அறிவியல் சார்ந்த படிப்புகள் வேறுபட்டு நிற்கின்றன. அப்படிப்புகள் சவால்களையும், வாய்ப்புகளையும் ஒரு சேர வரவேற்பவர்களுக்கு பிடித்தமான துறையாக இருக்கின்றன. அப்படிச் சில படிப்புகள் கீழே தொகுக்கப்படுகின்றன.
PG Diplomo OF Associateship of National Sugar Institute(Sugar Engineering)
சர்க்கரை உற்பத்தி தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட இப்படிப்பு கைகொடுக்கிறது. சர்க்கரை மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் தொழில்நுட்ப உதவி வழங்குவது பற்றிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆலைகள், கொதிகலன்கள், மின்நிலையம், நீராவிச் சமனிலை, உபரி மின்உற்பத்தி போன்ற துறைகள் சார்ந்து இத்தொழில்நுட்பம் கற்பிக்கப்படுகிறது.
பான்-இந்தியா நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். படிப்புக்காலம் 18 மாதங்கள். பயிற்சிக் கட்டணமான 22 ஆயிரத்து 660 ரூபாயை இரு தவணைகளில் செலுத்தலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடக்ஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் டெக்னாலஜி மற்றும் இணையான பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
மேலும் விவரங்களுக்கு www.nsi.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
M.Sc., And PG DIploma In Bioinformatics, Biotechnology And Cheminformatics
கடந்த பத்தாண்டுகளில் உயிரியல் துறை, உயிரி தொழில்நுட்பம், உயிரிதகவலியல் என பல்வேறு துறைகளாக விரிவடைந்திருப்பதை உணர்ந்திருக்கிறோம். உயிரிதகவலியல் துறையில் கம்ப்யூட்டர்கள் சேகரித்தல், சேமித்தல், பகுப்பாய்வு செய்தல், உயிரி மற்றும் மரபியல் தகவல்களை உள்ளீடு செய்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
பெங்களூரு, உயிரித்தகவலியல் மற்றும் பயன்பாட்டு உயிரித் தொழில்நுட்பவியல் நிறுவனம்(IBAB) இந்தியத் தகவல்தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் முக்கியமான ஆய்வு நிறுவனமாகும். இந்நிறுவனம் 18 மாத கால எம்.எஸ்சி., பயோ இன்பர்மேடிக்ஸ், பயோ டெக்னாலஜி படிப்பை வழங்குகிறது. இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இதற்கான பட்டத்தை வழங்கும். PG Diploma படிப்பும் மூன்று பருவத்தேர்வுகளுடன் 18 மாத கால அவகாசத்தைக் கொண்டுள்ளது. இப்படிப்புகள், பயோடெக்னாலஜி மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளுக்குள் நுழைவதற்கு ஏதுவாக அமைகின்றன.
மேலும் விவரங்களுக்கு http://www.ibab.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
இன்னும் பல கல்வி படிப்புகள் உள்ளன அவற்றை அடுத்த தொடரில் காணலாம்.
தகவல் : கல்வி களஞ்சியம்