"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
15 நவம்பர் 2011

நட்பின் வகைகள்

0 comments


நாமெல்லாம் நம் நண்பர்களிடமும் சகோதரர்களிடமும் அன்பு கொள்கிறோம்; ஏதாவது ஒருவகையில் சார்ந்திருக்க ஆரம்பிக்கிறோம். சில காலம் கழித்து, அவர்களுள் சிலரிடம் நட்பின் ஈரம் குறைவதைக் காண முடிகிறது. அதாவது உண்மையான நட்பிற்கு என்று ஓர் இலக்கணம் உண்டு இல்லையா, அது கைநழுவுகிறது. அது ஏற்படுத்தும் அதிர்ச்சியில் உடனே அவர்களைக் கடிந்துகொள்ளவோ குற்றம் காணவோ துவங்குகிறோம்.

அப்படிக் கடிந்து கொள்வதிலோ, குற்றம் காண்பதிலோ என்ன பயன் இருக்க முடியும்?

பெயரளவில் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் சிலரது நட்பை முறித்துக் கொள்வோம் என்று உங்களுக்குத் தோன்றலாம். பிறகு யோசித்துப் பாருங்கள். நாம் மக்களிடம் கொண்டுள்ள தொடர்பானது அடிப்படையில், மேலெழுந்தவாறான நட்பு என்றும் சகோதரத்துவத்துடன் கூடிய ஆழமான நட்பு என்றும் இரு வகைப்படுகிறது. எனவே நட்பை ஏன் முறித்துக் கொள்ள வேண்டும்?

அதற்கு பதிலாய், நெருக்கமான சகோதரர்களாய் நாம் தவறாகக் கருதிய அவர்களை, அந்த வட்டத்திலிருந்து நீக்கி, மேலெழுந்த நட்பு வட்டாரத்திற்கு நகர்த்திவிடலாம். அந்த வட்டத்திற்குள்ளும் பொருந்திப் போகாத அளவு அவர்களது நட்பின் இடைவெளி கூடுதலாக இருப்பின் பொதுவான தொடர்பாளர்கள் என்ற வட்டத்திற்குள் அவர்களை நகர்த்தி அந்த அளவிற்கு அவர்களிடம் பழகிக் கொள்ளலாம். முழுக்க முழுக்க அவர்களது நட்பை முறித்துக் கொள்வதைவிட, அவர்களிடம் பூசல் கொள்வதைவிட இது சிறந்ததாயிற்றே.

இன்று மக்களில் பெரும்பாலானவர்கள் நாம் பொதுவான தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கே தகுதியுடையோராய் உள்ளனர். இவர்களில் மேலெழுந்தவாரியான நண்பராய் ஒருவர் அமைவதே அரிதாய் உள்ளது. நேர்மையான சகோதரத்துவ நட்பு என்பதோ இக்காலத்தில் பெரும்பாலும் வழக்கொழிந்தே போய்விட்டது. அதை எதிர்பார்க்கக்கூடாது.

கரம் பிடித்த மனைவி, பெற்றெடுத்த பிள்ளைகள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோரிடங்கூட தூய்மையான உறவை நம்பி எதிர்பார்க்க முடியாத இக்காலகட்டத்தில், தூய சகோதரத்துவத்துடன் கூடிய நட்பை நண்பர்களிடம் எதிர்பார்ப்பது கானல் நீர் போன்றதே. ஆகவே, தாமரை இலை நீர்போல் அறிமுகமில்லாத ஒருவரைப் போலவே
மக்களிடம் பழகிக் கொள்வது ஆழ்ந்து பழகியபின் ஏமாற்றம் அடைவதைவிட நல்லது. ஏனெனில் தூய்மையான சகோதரத்துவ நட்புடன் பழகும் ஒருவர் சந்தர்ப்பவாதமாகவோ, ஏதேனும் உலக ஆதாயத்திற்காகவோ பொய்யான பாசத்தைக் காட்டியிருந்தால் காலப்போக்கில் அவரது நிறம் வெளுக்கும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படும்.

அல் ஃபுதைல் இப்னு அய்யாத் கூறினார், “நீங்கள் யாரிடமாவது நேசங்கொள்ள விரும்பினால் அவரை ஆத்திரப்படுத்திப் பாருங்கள். அவர் ஆத்திரத்திலும் நிதானமாய், பொருத்தமாய் நடந்துகொண்டால் அவரிடம் நட்பு கொள்ளுங்கள்”

இந்தக் காலத்தில் இத்தகைய பரிசோதனையை யாரிடம் செய்து பார்க்க முடியும்? யாரையாவது நீங்கள் அறியாமல் யதேச்சையாய் ஆத்திரப்படுத்திவிட்டாலே அடுத்த நொடியே உங்களை எதிரியாய் அல்லவா அவர் கருதிவிடுகிறார்?

தூய்மையான சகோதரத்துவம் என்பது அழிந்துவிட்டதற்கான காரணம் யாதெனில் பழைய காலத்தில் மக்கள் மறுமையின் அடிப்படையில் கவலைப்பட்டார்கள். எனவே மக்களுடன் பழகுவதிலும், அவர்களுடன் சகோதரத்துவம் கொள்வதிலும் அவர்களது நோக்கம் தெளிவாய் இருந்தது; தூய்மையாய் இருந்தது. அவர்களுக்கு இடையேயான உறவு உலக வாழ்க்கைக்காக அல்லாமல் அல்லாஹ்வுக்காக அமைந்திருந்தது. இப்பொழுதோ உலக இச்சையே மக்களின் மனதைப் பிரதானமாய் ஆக்கிரமித்துள்ளன.
oOo
மேலே உள்ள கருத்துகள், இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்), ஸைத் அல்-காத்திர் (Sayd Al-Khatir) எனும் தமது நூலில் நட்புறவைப் பற்றி எழுதியதிலிருந்து திரட்டியவை. மக்கள், நட்பு, சகோதரத்துவம் என்பதையெல்லாம் எந்தளவு உணர்ந்து, ஆய்ந்து எழுதியிருப்பார் என்பதை மேலோட்டமாய்ப் படிக்கும்போது நாம் உணரலாம்; வியக்கலாம். அதையும் தாண்டி அதில் ஒளிந்திருந்த ஒரு விஷயமே இதை இங்குப் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது.

“இந்த காலத்தில்”, “இப்பொழுது” என்று ஆங்காங்கே குறிப்பிடுகிறாரே இமாம் இப்னுல் ஜவ்ஸீ அது எந்தக் காலம்? ஹிஜ்ரீ ஆறாம் நூற்றாண்டு! அதாவது நம்முடைய இந்தக் காலத்துக்கு எண்ணூற்று சொச்ச ஆண்டுகளுக்கு முன்.

எனில், இன்று நமது நிலையையும், சகோதரத்துவ வாஞ்சையையும், தூய்மையின் இலட்சணத்தையும் என்ன சொல்வது?

சிந்திக்கும் மனங்கள் வளம் பெறும், இன்ஷாஅல்லாஹ்.

-நூருத்தீன்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி