12 டிசம்பர் 2011
பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி...
அரசாங்கம் மின்சார கட்டணத்தை உயர்த்தினாலும் சரி, பஸ் கட்டணத்தை அதிகரித்தாலும் சரி, பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தினாலும் சரி, மக்கள் எப்போதுமே `குய்யோ முறையோ’ என்று கத்துவது ஒரு வாடிக்கையாக போய்விட்டது. அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு இதுதான் சாக்கு என்று, “பார்த்தாயா, பார்த்தாயா, கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள் பார்த்தாயா” என்று மேடைதோறும் முழங்குவதும், பக்கம், பக்கமாக அறிக்கை எழுதுவதும் எப்போதும் பார்க்கும் ஒன்றாகும்.
ஆனால், நிச்சயமாக இதில் குறை, மக்கள் பக்கமும், அரசியல் கட்சியினர் பக்கமும்தான் இருக்கிறது. அரசாங்கம், மின்கட்டணத்தை சொல்லாமல் கொள்ளாமல் உயர்த்திவிடுவது இல்லை. சமீபத்தில் மின்கட்டணத்தை உயர்த்தப்போவதை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சூசகமாக ஓர் அறிக்கையில் தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாமல், மின்சார உற்பத்திச்செலவும் அதிகமாகி, வெளிச்சந்தையில் இருந்து வாங்கவேண்டிய நிலையால் அதற்கும் செலவாகி, ரூ.53 ஆயிரம் கோடி நஷ்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூழ்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இனிமேலும் இந்த நஷ்டத்தை தாங்க முடியாது என்று தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு மின்சார வாரியம், தான் உயர்த்துவதற்காக திட்டமிட்டுள்ள உத்தேச கட்டண பட்டியலை, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் கட்டண விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். அந்த ஆணையமும் உடனடியாக அப்படியே இந்த கட்டண உயர்வை ஏற்றுக்கொண்டு அறிவித்துவிடவில்லை. இந்த மாத இறுதிவரை மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்றும், ஜனவரி மாதத்தில் இதுகுறித்து பொதுவிசாரணை நடத்தி, அதன்பிறகே கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும். அந்த முடிவுதான் அறிவிப்பாக வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஆக தன்னிச்சையாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துவிடவில்லை. ஆனால், இதுவரையில் வெறும் 10 பேர்கள் மட்டுமே இந்த ஆட்சேபனைகளை தெரிவித்து இருக்கிறார்கள் என்றால், குறை யார் பக்கம் இருக்கிறது? நிச்சயமாக மக்கள் பக்கமும், அரசியல் கட்சியினர் பக்கமும், அமைப்புகள் பக்கமும்தான் உள்ளது. இன்னும் 20 நாட்களுக்கு காலஅவகாசம் இருக்கிறது. இனிமேலும் மக்களும் சரி, அரசியல் கட்சியினரும் சரி, சமூக ஆர்வலர் அமைப்பினரும் சரி, தங்கள் கருத்துகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முறையாக தெரிவிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வாய்ப்பு கொடுத்தும் அதை உரிய முறையில் பயன்படுத்தாமல் அரசை மட்டும் குறை கூறுவது சரியல்ல.
இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் தமிழ்நாட்டில் அனைத்து பத்திரப்பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணமும், பதிவுக்கட்டணமும் அந்தந்த பகுதி நிலங்களின் வழிகாட்டி மதிப்புகளின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2007-ம் ஆண்டு இந்த வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது புதிதாக வழிகாட்டி மதிப்பை மறு நிர்ணயம் செய்வதற்காக ஒரு நகல் வழிகாட்டி மதிப்பு பத்திரப்பதிவு துறையினரால் தயாரிக்கப்பட்டு, அதன்மீது பொதுமக்களின் கருத்து கேட்க அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதிவரை இதன் மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். பொதுமக்களின் கருத்துகளை ஒன்றாக திரட்டி, அதன்மீது அதிகாரிகள் ஆய்வு செய்து, பிறகே இறுதி வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்புவோம் என்று பதிவுத்துறை தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துவிட்டார். துறையினர் செய்ய வேண்டிய வேலையை செய்துவிட்டனர்.
இனி கருத்து தெரிவிக்கும் வேலையையும் அவர்கள் செய்ய முடியாது. மக்கள்தான் செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு குறைவாக இருக்கிறது, அல்லது அதிகமாக இருக்கிறது என்ற முறையீட்டை மக்கள்தானே செய்யவேண்டும். எனவே, மின்கட்டணத்தை உயர்த்தினாலும் சரி, பதிவு கட்டணத்தை உயர்த்தினாலும் சரி, மக்கள் விழிப்புணர்வோடு இருந்து தங்கள் கருத்துகளை தெரிவித்தால்தான், ஒரு நியாயமான நடவடிக்கையாக இருக்கும். அதைவிட்டுவிட்டு “நான் புத்திசாலி, வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யும் முன்னால் எனது பத்திரத்தை பதிவை செய்து முடித்துவிட்டேன்” என்று மார்தட்டிக் கொள்வதில் அர்த்தமே இல்லை. குறை இருப்பது மக்களிடம் தானே தவிர, மின்சார வாரியத்திடமோ, பத்திரப்பதிவு துறையிடமோ இல்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி