சமீபத்தில் "உணவை வீணாக்காதீர்கள்" எனும் தலைப்பில் சவுதியில் உணவு வீணாக்கப் படுவதைப் பற்றி ஒரு பதிவு பல இணையத்தளத்தில் வந்தது. அதற்குப் பரிகாரமாக இதோ ஒரு செய்தி! இந்த உணவக உரிமையாளரை மனதார வாழ்த்துவோம்.
"உள்நின்று உடற்றும் பசிப்பிணியால் உலகில் வாடும் மக்கள்தொகை எண்ணி முடியாது" உலகின் பசிப்பிணி போக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த ஒரு உண(ர்)வகத்தைப் பற்றிய செய்தி இது !
எந்தவிதமான நிபந்தனையுமில்லை. இவ்வுலகின் பொல்லாப் பிணிகளான ஏழ்மையும் வறுமையும் பீடித்த யாரும் வந்து முற்றிலும் இலவசமாக வயிறார உண்ணலாம் என்று சவூதி அரேபியாவின் உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.
உணவுக்குப் பணம் கொடுக்க இயலாதவர்களும் இலவசமாக எங்கள் உணவகத்தில் வந்து உண்டு செல்வதற்காக எங்கள் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளோம் என்று தாயிஃப் நகரிலுள்ள அந்த உணவக உரிமையாளர் அறிவித்துள்ளார். தனது பெயரையும் குறிப்பிட அவர் விரும்பவில்லை.
இச்செய்தியை சவூதி அரேபியாவின் பிரசித்திப் பெற்ற ஓகாஸ் அரபு நாளேடு தெரிவித்துள்ளது.
நண்பகலிலிருந்து மதியம் 2 மணி வரை யாரும் வந்து உணவுண்டு செல்லலாம் என்று அந்த உரிமையாளர் அறிவித்துள்ளார்,
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து. இலவச உணவகங்களை நடத்த அனுமதி கோரி அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனராம்.