எஸ்எஸ்எல்சி தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்களை தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். கல்வித் தகுதியை பதிவு செய்து 5 வருடங்கள் முடிந்திருக்க வேண்டும். அதாவது 31.12.2006ம் தேதியிலும் அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர்கள் கடந்த 31ம் தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருக்கக் கூடாது. இதர வகுப்பினர் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருக்க கூடாது.
மனுதாரருடைய குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருக்க கூடாது. எனினும் தொலைத்தூரக் கல்வி பயில்பவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக எவ்வித சுய தொழில் செய்பவராகவோ பணம் ஈட்டுபவராகவோ இருக்கக் கூடாது.
அனைத்து அலுவலக வேலை நாட்களில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பபடிவம் பெற பதிவு அட்டை, கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் ஆகிய அசல் ஆவணங்களுடன் வருகை தர வேண்டும். விவரம் அறிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் கலைச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source : காலை நாளிதழ்