துபாய், ஜனவரி 08 : வேலை தேடுவோர்க்கும், வேறு வேலைக்கு அல்லது நிறுவனத்துக்கு மாறிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் பிறந்திருக்கின்ற 2012 நல்ல ஆண்டாக இருக்குமென்று Gulf News ஆய்வு வெளியிட்டு இருக்கிறது. அமீரகத்தின் புகழ்பெற்ற நிறுவனங்கள் அடுத்து வரும் மாதங்களில் புதிய ஆட்களை தேர்ந்தெடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின்படி 93 சதவீத நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை கூட்ட முடிவு செய்துள்ளன. இருந்தபோதும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் எச்சசரிக்கையுடனே இந்த நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அதிக விற்பனையாகும் நுகர்பொருள்கள் ,கட்டுமானம், மருத்துவம், மற்றும் காப்பீட்டு துறைகளில்தான் அதிகமான வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. முதலீட்டு சம்பந்தமான வங்கித்துறைகள் கடந்த வருடம் இருந்த அதே அளவு வளர்ச்சியைத்தான் பெறமுடியும் .அதே நேரம் ஒருங்கிணைந்த மற்றும் சில்லறை வங்கிதுறைகள பெரும் வளார்ச்சி பெறலாம் என்றும் அவற்றுள் வேலை வாய்ப்புகள் அதிகம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Gulf Recruitment Group என்ற நிறுவனத்தின் மேலாளர் ஆன மார்க் டிம்மிஸ் என்பவரின் கருத்துப்படி அவர்களுடைய சந்தை ஆய்வுகளும், நடத்திய சர்வேக்களும் வேலைவாய்ப்புகள் மீண்டும் அமீரகத்தில் பிரகாசமாவதற்கான கதவுகளை திறந்திருக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களும், உள்ளூரில் புகழ் பெற்ற நிறுவனங்களும் இந்த வருடத்தில் பெரும் வியாபார வளர்ச்சியை எதிர் நோக்கி இருப்பதால் அவர்களுடைய வேலைக்கு ஆளெடுக்கும் துறைகளை முடுக்கிவிட்டுள்ளன. கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இவ்வருடத்தின் முதல் இரு கால ஆண்டுகளில் போதுமானதும் வெளிப்படியாக தெரியக்கூடியதுமாக பதினேழு சதவீத அளவுக்கு தங்களது திட்டங்களை இத்துறையில் வகுத்துள்ளன. இவைகளில் அதிக பட்சமாக திட்ட மேலாண்மையும், பொறியியல் திட்டங்களும் அடங்கும்.
காப்பீட்டு துறை தனது வருமானத்தை பெருக்ககூடிய வகையில் விற்பனை பிரதிநிதிகளை அதிகம் அமர்த்தும். அத்துடன் நஷ்ட ஈடுகளை நிர்வகிக்கவும் ,திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஆற்றல் பெற்றவருக்கு இந்த துறையில் அதிக வாய்ப்புக்கள் தேடிவர உள்ளன.
அமீரகத்தின் பொருளாதாரம் பலதுறைகளிலும் பீடுநடை போடத்துவங்கி இருப்பதும் எல்லா பிராந்தியம் மற்றும் வட்டாரங்களிலும் போதுமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதும் அதை முன்னிட்டு அந்த திட்டங்களுக்கு ஏற்ற வல்லமை பெற்றோர் தேர்வு செய்யப்பட இருப்பதும் வெள்ளிடை.ஆய்வின்படி பெரிய நிறுவங்கள் திறமைசாலிகளை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்குள் போட்டி போடத்தொடங்கிவிட்டன. ஆனாலும் தேவைக்கு ஏற்றபடி திறமைசாலிகள் கிடைப்பதில் பிரச்னை இல்லை என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
2011 வருடத்தோடு ஒப்பிடும்போது வங்கிகள் வர்த்தக கடன்களை முன்னை விட அதிகம் வழங்க தொடங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதால் எதிர்கால வர்த்தகம் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலும், சீன, இந்திய முதலிய நாடுகளில் உலவும் நிச்சயமற்ற பொருளாதார வளர்ச்சி உலகப்பொருளாதாரத்தை பொருத்தவரை நிச்சயமற்ற நிலைமைகளை உருவாக்கினாலும் வளைகுடா நாடுகளை அந்த பாதிப்புகள் தீண்டாத வண்ணம் வழக்கம் போல் ஐரோப்பிய முதலீடுகளையும், இந்திய சீன முதலீடுகளையும் கவரும் வண்ணம் அமீரகம் தொடர்ந்து செழிக்கும் வளம் கொழிக்கும் . வளைகுடாநாடுகளின் வளர்ச்சிக்கு உலகின் மற்ற பகுதிகளின் வீழ்ச்சி பெரும்காரணமாக அமையாது என்றே Gulf Recruitment Group கூறுகிறது.
தகவல் : நண்பர் சகோ. இல்யாஸ் ( நிருபர் – முத்துப்பேட்டை )