குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப் படுகொலைகளை மோடியின் கும்பல்தான் முன்னின்று நடத்தியது என்பதற்கு மற்றுமொரு ஆதாரமாக பிப்.8, 2012 அன்று குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அமைந்துள்ளது. கலவரங்களை ஒடுக்க அக்கறையில்லாமல், வன்முறைப் பரவ வழிவகுத்து இருந்த மோடி அரசின் பாதகச் செயல்களை தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய இருக்கை மிகக்கடுமையாகக் கண்டனம் செய்துள்ளது.
குஜராத் கலவரங்களின் போது சங்பரிவார வெறியர்களால் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்களை அரசாங்கமே கட்டித்தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 2003ம் ஆண்டு ஐ.ஆர்.சி.ஜி. என்ற இஸ்லாமிய அமைப்பு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. சேதமடைந்த பள்ளிவாசல்களுக்கு இழப்பீடு வழங்குவது மாநில அரசின் கொள்கையில் இல்லை என மோடி அரசு சார்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கலவரத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கியது
போலவே, கலவரக் கும்பலால் இடிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை மாநில அரசே நிதியுதவி செய்து கட்டித்தரவேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. மதக்கலவரங்களால்தான் மாநிலமெங்கும் முஸ்லிம்களின் ழிபாட்டுத்தலங்கள் பெருமளவில் இடிக்கப்பட்டன. எனவே இவற்றைக் கட்டித்தரும் கடமையிலிருந்து அரசாங்கம் விலகிவிட முடியாது என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மாவட்ட முதன்மை நீதிபதிகளும், தங்கள் மாவட்டத்தில் கலவரத்தால் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் சீரமைப்பு குறித்து வரும் முறையீடுகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பள்ளிவாசல் மறுநிர்மாணம் குறித்த வழக்குகளை கிடப்பில் போட்டு ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்காமல், கோரிக்கை மனு வந்த 6 மாத காலத்திற்குள் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.
குஜராத் கலவரத்தில் மூலமும், மூளையும் மோடியே...கலவரத்தைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை... முஸ்லிம்களின் உயிர், உடைமை, மானம், வழிபாட்டுத்தலங்கள் இக்கலவரத்தில் குறிவைத்து சேதப்படுத்தப்பட்டன... என்ற உண்மைகளை குஜராத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் ரணப்பட்டுக் கிடந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு இத்தீர்ப்பு வயிற்றில் பாலை வார்த்துள்ளது
thanks : - tmmk