"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 பிப்ரவரி 2012

பரந்த பாலைவனத்தை நீ கண்டால்...!

0 comments


உலக இன்பம் அற்பமானது.உலகம் சுமைகள் நிறைந்தது.உலகம் கவலை மிகுந்தது.உலகம் பல நிறங்களைக் கொண்டது.துக்கம்,துன்பம்,துயரம் ஆகியவற்றின் கலவைதான் உலகம்.அதில் நீயும் ஒருவன்.

பிரச்சனைகள் இல்லாத இடமே இல்லை.உன்தந்தை,மனைவி,நண்பன் ஆகியோர் வாழ்விலும் நிச்சயமாகத் துயரங்கள் இருக்கும்.உனது வீட்டிலும்,தொழிலிலும் சிக்கல்கள் உருவாகும்.எனவே,நன்மையின் குளிர்ச்சியால் தீமையின் வெப்பத்தை நீ தணித்துக் கொள்.

இறைவன் இந்த உலகத்தை முரண்பாடுகளால் அமைத்துள்ளான்.நன்மை-தீமை, அமைதி-குழப்பம், மகிழ்ச்சி-கவலை என ஒவ்வொன்றிலும் இரு வேறு தன்மைகளை,நிலைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

பசித்த பிறகு உண்கின்றாய்,தாகித்த பிறகு நீர் அருந்துகின்றாய்,களைப்புற்ற பிறகு உறங்குகின்றாய்.நோயுற்ற பிறகு குணமடைகின்றாய்.காணாமல் போனவன் விரைவில் வருவான். வழிதவறியவன் நேர்வழி பெறுவான்.

பரந்த பாலைவனத்தை நீ கண்டால், அதற்கப்பால் பசுமை நிறைந்த,மரங்கள் மிகுந்த அழகான தோட்டம் உண்டு என்பதைப் புரிந்துக் கொள்.

உறுதியான கயிற்றைக் கண்டால் அது ஒரு நாள் அறுந்து போகும் என்பதையும் நீ அறிந்துக் கொள்.

கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு. அச்சத்திற்குப் பிறகு அமைதி உண்டு.அதிர்ச்சிக்கு பிறகு நிம்மதி உண்டு.

எனவே எதார்த்தமான வாழ்க்கையை மேற்கொள்.கற்பனைகளில் மிதக்காதே! வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்து வாழ்வதற்கு உனது ஆன்மாவைப் பக்குவப்படுத்து. இந்த உலகில் காயங்கள் அற்ற மனிதனையும்,குறைகள் அற்ற பொருளையும் உன்னால் காண முடியாது.முழுநிறைவும்,கவலையின்மையும் வாழ்க்கையின் பண்புகள் அல்ல.
கீ போர்டில் இருந்து கையை எடுத்து இறங்கி நடந்து ஏழைகள் வாழும் பகுதியில் நின்று கொண்டு உன்னைச் சுற்றிலும் பார்.வலப்பக்கமும், இடப்பக்கமும் பார். துயரப்படுவோரும்,துன்பப்படுவோரும்தாம் உனது கண்ணில் அகப்படுவார்.ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல்.ஒவ்வொரு கன்னத்திலும் கண்ணீரின் அடையாளம்... எல்லா திசைகளிலும் வலியின் ஓசை.உன்னைச் சுற்றி இதுதான் நடைபெறும்.

இந்த உலகில் நீ மட்டும் சோதிக்கப்படவில்லை.மற்றவர்களை ஓப்பிட்டுப் பார்த்தால் உனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறைவானவையே.பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு,உறக்கமின்றி இங்கும் அங்குமாகப் புரண்டுப் புரண்டு அவதிப்படுவோர் பலர் இருக்கின்றனர்.நோயின் வலி தாளாமல் துடிப்பவர்களும்,கதறுபவர்களும் அதிகம் உள்ளனர்.வருடக்கணக்காக சிறையில் வாடுவோர்தாம் எத்தனை பேர்! சிறைக் கூடத்தைத் தவிர வேறேதையும் அறிய முடியாமல், தமது கண்களால் சூரியனைக் கூட பார்க்க இயலாமல் சிறையில் வாடுவோர் ஏராளம் ஏராளம்.

இளம் வயதிலேயே தம் செல்லப்பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயும் தந்தையும் இந்த உலகில் அதிகம் உண்டு.கடன் பிரச்னையால் நொந்து போனவர்களும்,பல்வேறு இன்னல்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு.

முடிந்தது முடிந்துவிட்டது
எதிர்பார்க்கப்படுவது மறைவானது
நீ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த நேரம் மட்டும் உனக்குரியது.

நீ கவலைப்படாதே! ஏனெனில் உனது கவலையின் மூலம் சூரியனை,கால ஓட்டத்தை நிறுத்த நினைக்கிறாய். கடிகார முள்ளைப் பின்னோக்கி நகர்த்த முனைகிறாய்.பின்னோக்கி நடக்க முயல்கிறாய்.ஆற்றை அதன் பிறப்பிடத்தில் பால் திருப்பியனுப்பத் துடிக்கிறாய்.

நீ கவலைப்படாதே! கவலை,புயல் போன்றது.அது காற்றை நாசமாக்கும்.பேரலைகளை உருவாக்கும்.வானிலையை மாற்றும்.இசைக்கும் தோட்டத்தின் கண்கவர் மலர்களை அழிக்கும்.

நீ கவலைப்படாதே! ஏனெனில் கவலை கடலில் குதித்து கடலிலேயே ஓடும் அறிவற்ற ஆற்றைப் போன்றது. கவலைப்படுவது உடைந்த பானையில் தண்ணீரை நிரப்புவதற்கு ஒப்பானது.

இறைவா! உறங்காத கண்களில் உன்னிடமிருந்து நிம்மதியான உறக்கத்தைப் போடு.தடுமாறும் மனங்களில் அமைதியை ஏற்படுத்து. அவற்றிற்கு வெற்றியைப் பரிசாக வழங்கு.தடுமாறும் பார்வைகளுக்கு உன் ஒளியின்பால் வழிகாட்டு.வழிதவறியவர்களுக்கு நேர்வழி காட்டு.

thanks :வலையும்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி