'வாலண்டைன் டே'/காதலர் தினம் என்ற பெயர்களில் காதல் போர்வையில் ஒளிந்துள்ள காமுகர்களுக்கு வசதிசெய்யும் வகையில் பிப்ரவரி-14 ஐ உலகெங்கிலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி விட்டது.
வருடம் முழுவதும் பல்வேறு சுரண்டல்கள் மூலம் வயிறு பெருக்கும் முதலாளிகளுக்கு இந்தக் கொண்டாட்டம் மூலம் கணிசமான வருவாய் கிட்டும் என்பதால் இதற்கான விளம்பரங்களை ஊடகங்கள் மற்றும் அனைத்து மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமும் பரப்பி வருகின்றனர்.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கவுள்ள இளந்தலைமுறையினர் அதுகுறித்த புரிதல்களை வளர்த்துக்கொள்ள எந்த பெற்றோரும் எதிர்களல்லர். ஆனால், அதற்கான வழிமுறை என்ற பெயரில் கையாளும் மோசமான வழிகளே எதிர்ப்புகளை உருவாக்குகின்றன. இத்தகைய கொண்டாட்டங்களை எதிர்ப்பவர்களில் முன்னாள் காதலர்களான இன்றைய பெற்றோரும் உட்படுவர் என்பதால், காதலர் தினம் என்ற பெயரில் கூத்தடிக்கும் காமுகர்கள் தினத்தை எதிர்ப்பது, ஒழுக்கம் பேணும் சமூகத்தின் மீதான தார்மீகக் கடமையாகும்.
இன்னொரு பக்கம், இந்தத் தினத்தில் கலாச்சார சீரழிவைத் தடுக்கிறோம் என்ற பெயரில் கர்நாடக சட்டசபையில் பலான கலாச்சாரத்தைக் காத்தவர்களும் களமிறங்குவார்கள். இதன் பின்னணியில் ஒரு கலாச்சாரமும் இல்லை; கத்தரிக்காயும் இல்லை. காதலுக்காக உயிர்விட்ட வாலண்டைன் என்பவர் ஒரு கிறிஸ்தவர் என்பதால், மதம்சார்ந்த எதிர்ப்புதானேயன்றி வேறில்லை! இவர்களுக்கு நம் கலாச்சாரத்தைக் காப்பதில் உண்மையான அக்கரையிருந்தால் 'ஹோலி' என்ற பெயரில் வண்ணக் கலவைபூசி, கையில் ராக்கி கட்டும் கலாச்சாரத்தையும், வடநாட்டு இறக்குமதி செய்யப்பட்டு சகோதரர்களாகப் பழகிவருபவர்களை மதரீதியில் பிரிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையும் எதிர்க்கவேண்டும்.
ஏன் சார், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வதுகூடத் தவறா? என்று அப்பாவியாகக் கேட்பவர்களும் உள்ளனர். ஐயா! பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டு பிப்ரவர்-14 மட்டுமல்ல, வருடம் முழுவதும் அன்பை பரிமாறினால் யாரும் கலாச்சார கூக்குரலிடப் போவதில்லையே! அன்பு என்பது ஓர் உணர்வு. அனைத்துஜீவராசிகளும் தமது துணையுடன் அன்பு கொள்வதும் வெளிப்படுத்துவதும் இயற்கை நியதி.
அன்பு மிகைத்தால் அது கலவியில் முடியும்! தாய்-மகன், தந்தை-மகள்,ச கோதரன்-சகோதரி என்பதாக எத்தனையோ உறவுகளை நாம் உருவாக்கிக் கொண்டபோதிலும் அவர்களின் அன்புப் பரிமாற்றம் இவற்றிலிருந்து விதிவிலக்கு. சமவயது இளைஞனும் - இளைஞியும் பரிமாறிக்கொள்ளும் அன்பு அவ்வாறல்ல;
ஊசலாட்டத்திற்கான வழிகள் மலிந்துள்ள சூழலை உருவாக்கிவிட்டு அறநெறி தவறாது இவர்களால் அன்பைப் பரிமாறுவது அரிதினும் அரிதே!
உன்னை மாதிரி பெருசுகள் என்னதான் சொன்னாலும் அன்பை வெளிப்படுத்தியே தீருவோம் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களுக்கு ஏதோ நம்மால் முடிந்த இலவச ஆலோசனைகள்!
1) வாழ்த்து அட்டைகளுக்குச் செலவளிக்கும் தொகையை அனாதை இல்லத்திற்கு நன்கொடையாகக் கொடுத்தால், பெற்றோரின் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் ஒருநாள் உணவுக்குப் பயன்படும்.
2) பரிசு, புத்தாடை மற்றும் சாந்தோம், பெசண்ட்நகர் பீச் முதல் PIZZA, KFC என்று கடலை போட செலவளிக்கும் தொகையை, பிள்ளைகளின் அன்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் முதியோர் இல்லத்திற்குக் கொடுத்தால் அது அவர்களின் ஒருமாத செலவுகளுக்குப் போதுமானது.
3) இவையன்றி தானே புயலால் வீடிழந்து, வாழும் வழிகள் அடைபட்டு மத்திய/மாநில அரசுகளின் உதவிக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அன்போடு வழங்கலாமே!
இவ்வாறு நல்லவை செய்வதற்குச் சொல்வதால் நாங்கள் பெருசா?
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்றைய இளங்காதலர்களே! கொஞ்ச-நஞ்சம் நம்முடன் ஒட்டிக் கொட்டிருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் சிதையாமல் விட்டு வைத்திருந்தால், பிப்ரவரி-14, 2032 இல் நீங்களும் இதைத்தான் சொல்வீர்கள்!
- அதிரைக்காரன்